Mahindra Thar இந்த வெள்ளை நிறத்தில் பார்க்கவே செம்மையா இருக்கு... புக்கிங் குவிய போகுது!!
மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம் ஒன்று கண்ணை கவரக்கூடிய எவரெஸ்ட் வெள்ளை நிறத்தில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்தில் காட்சி தந்துள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.
மஹிந்திரா தார், இந்தியாவின் லைஃப் ஸ்டைல் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் என அழைக்கப்படுகிறது. பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் இந்த மஹிந்திரா தயாரிப்பு பிரபலமான மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்திற்கு போட்டியாக விளங்கியது. தார் வாகனத்தின் 2ஆம் தலைமுறை மாடல் கடந்த 2020இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அதன்பின்பும் தாரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு வேரியண்ட்களை மஹிந்திரா கடந்த காலங்களில் களமிறக்கியுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியர்-வீல்-டிரைவ் வெர்சன் ஆகும். ஏனெனில் அதற்கு முன்பு வரையில் 4-சக்கர-டிரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த தார் தற்போது 2-சக்கர-டிரைவ் சிஸ்டம் உடனும் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் எவரெஸ்ட் வெள்ளை மற்றும் பிளாஸிங் அலுமினிய நிறத்தேர்வுகளையும் தாரில் மஹிந்திரா அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இரு புதிய பெயிண்ட் தேர்வுகள் ஆரம்பத்தில் 4x2 வெர்சனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில், விலைமிக்க, டாப் வேரியண்ட்களான 4x4 தார் வாகனத்திலும் மஹிந்திரா கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளை நிறத்திலான மஹிந்திரா தார் 4x4 வாகனங்கள் தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. அவற்றுள் ஒரு தார் வாகனத்தை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
வீடியோவில் எவரெஸ்ட் வெள்ளை நிற பெயிண்ட்டில் மஹிந்திரா தார் காட்சியளிக்கிறது. வீடியோவில் காட்சித்தரும் இந்த குறிப்பிட்ட தார் வாகனத்தில் 'எம்ஹாவ்க் 130' முத்திரை பொருத்தப்பட்டுள்ளதை காணலாம். அதாவது, இந்த தாரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது இதன் அர்த்தமாகும். அதன்பின், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 4x4 முத்திரையையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு இந்த வீடியோவில் வெள்ளை நிற தார் வாகனத்தை சுற்றி, சுற்றி காட்டியுள்ளனர்.
புதிய 2023ஆம் ஆண்டிற்காக மேற்கூறப்பட்ட புதிய இரு பெயிண்ட் தேர்வுகளை தவிர்த்து, மஹிந்திரா தாரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான க்ரில், மஹிந்திரா லோகோ மற்றும் ஹலோஜன் ஹெட்லேம்ப்களையே முன்பக்கத்தில் கொண்டுள்ளது. வீடியோவில் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களை நெருக்கமாக பார்க்க முடிகிறது. மேட் கருப்பு நிறத்தில் உள்ள முன்பக்க பம்பருக்கு இரு பக்கங்களிலும் இரு ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகனத்தின் பக்கவாட்டில் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் கன்மெட்டல் கிரே நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில், ஒரு பக்கமாக திறக்கக்கூடிய கதவு உள்ளது. ஆனால் கதவுக்கு மேலே கண்ணாடியை மேல்நோக்கி திறக்க வேண்டும். முதலில் கதவை மூடிவிட்டு, அதன்பின் கண்ணாடியை மூடினால் கண்ணாடி உடைவதற்கும் வாய்ப்புள்ளதாக மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவை எடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றப்படி உட்பக்க கேபினில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2020இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, பலர் மஹிந்திரா தார் வாகனத்தை சிவப்பு அல்லது கருப்பு நிறத்திலேயே வாங்கியுள்ளனர். தற்போது இணையத்தில் கிடைத்துள்ள வீடியோவின் மூலம் எவரெஸ்ட் வெள்ளை நிறத்திலும் மஹிந்திரா தார் சூப்பராக உள்ளதை கூறியே ஆக வேண்டும். ஆதலால் இனி வரும் காலங்களில் பலர் வெள்ளை நிறத்திலும் தார் வாகனத்தை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









