போட்டினு சொன்னீங்க! ஆனா அடி பயங்கரமா விழுந்திட்டு இருக்கே! மஹிந்திராக்கு டஃப் கொடுக்க முடியாமல் திணறும் மாருதி
இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி மாறி இருக்கின்றது. நாட்டில் மிக அதிக காத்திருப்பு காலத்துடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய கார் மாடலுக்கு போட்டியளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே மாருதி சுஸுகி ஜிம்னி ஆகும்.
தார் காருக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பம்சங்களை மிக தாராளமாக இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, மஹிந்திரா தார் காரை 3 டோர் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில், மாருதி சுஸுகியோ ஜிம்னியை 5 டோர்கள் கொண்ட வாகனமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை மாருதி சுஸுகி ஜிம்னியில் வழங்கி இருக்கின்றது. ஆகையால், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் டிமாண்ட் அதிகம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இதன் வருகை மஹிந்திரா தார் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தார் காருக்கு நிலவிக் கொண்டிருக்கும் டிமாண்டும், வரவேற்பும் பெரிய அளவில் சரியவில்லை என தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. சென்ற 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் மாருதி சுஸுகி ஒட்டுமொத்தமாக 1,852 யூனிட் ஜிம்னி கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

இதே மாதத்தில் மஹிந்திரா தார் காரோ 5,593 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இது மாருதி சுஸுகியின் விற்பனையைவிட மூன்று மடங்கு அதிகம் ஆகும். சென்ற மாதத்தில் மட்டுமில்லைங்க இதற்கு முந்தைய மாதங்களிலும் மஹிந்திரா தார் காருக்கு சூப்பரான டிமாண்டே இந்தியாவில் கிடைத்திருக்கின்றது.
அந்தவகையில், மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்ட மாதமான 2023 ஜூன் மாதத்தில் இருந்து கணக்கிட்டு பார்த்தால், இதுவரை ஒட்டுமொத்தமாக 14,456 யூனிட் ஜிம்னிக்கள் விற்பனைச் செய்யப்பட்டு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதே ஐந்து மாத கால இடைவெளியில் மஹிந்திரா தார் காரின் யூனிட்டுகளோ 26,125 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.
மஹிந்திரா நிறுவனம் தார் காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆகும். சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தார் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் சற்றும் குறையாமல் இருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இதுபோன்ற அமோக விற்பனையை தார் பெற்றுக் கொண்டிருப்பதற்கு அந்த காரின் கவர்ச்சியான தோற்றம் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கின்றன. மஹிந்திரா தார் ஓர் அதீத பாதுகாப்பு திறன்கொண்ட வாகனமாகும். பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் 5க்கு நான்கு ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது.
பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன், பன்முக எஞ்ஜின் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
2.0 லிட்டர்'டர்போசார்ஜட் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன. இத்துடன், கியர்பாக்ஸ் தேர்வாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. தார் காரை போலவே மாருதி சுஸுகி ஜிம்னி காரிலும் சிறப்பு வசதிகள் மற்றும் ஆப்ஷன்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ஆனால் எஞ்சின் விஷயத்தில் ஒரே ஒரு பெட்ரோல் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. அது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் கே15பி பெட்ரோல் தேர்வாகும். இதைத்தாண்டி வேறு எஞ்சின் ஆப்ஷனையும் அது வழங்கவில்லை. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த காரில் டீசல் ஆப்ஷனை மாருதி சுஸுகி வழங்கி இருக்கும் எனில் கட்டாயம் தார் காருக்கு அது மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், மாருதி சுஸுகி டீசல் எஞ்ஜினை விட்டு வெகு தொலைவிற்கு நகர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் காருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதேவேளையில், மாருதி சுஸுகி ஜிம்னிக்கு கிடைத்துக் கொண்டிருப்பதும் நல்ல வரவேற்பே ஆகும். என்ன தார் காருடன் ஒப்படுகையில் போட்டி மாடலாக பார்க்கும் இதற்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறைவான வரவேற்பாக தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








