டிராஃபிக்கில் புகுந்து, புகுந்து போகலாம்!! மஹிந்திரா உருவாக்கியுள்ள தரமான ஆம்புலன்ஸ் - விலை எவ்வளவு தெரியுமா?
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கான பொலேரோ நியோ+ வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பொலேரோ வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களையும், இதன் விலையை பற்றியும் இனி பார்க்கலாம்.
ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு பெரிய பெரிய வேன்கள் பயன்படுத்தப்பட்ட காலம் போய், தற்போது கார்கள் கூட பயன்படுத்தப்பட ஆரம்பித்துவிட்டன. இதனால், பல கார் நிறுவனங்கள் தங்களது பிரபலமான கார்களை ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளதை பார்த்திருக்கிறோம். இந்த வரிசையில், மஹிந்திரா நிறுவனம் அதன் பொலேரோ நியோவை ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு ஏற்ப உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

பொலேரோ நியோ+ ஆம்புலன்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது ஏஐஎஸ்:125 (பகுதி 1) தரத்திற்கு இணையானது. இந்த ஆம்புலன்ஸ் காரை டைப்-B ஆம்புலன்ஸ் பிரிவில் பயன்படுத்தலாம். நியோ+ அதன் தரத்தை பொறுத்தவரையில் எந்தவொரு சூழலுக்கும் ஏற்றது என கூறும் மஹிந்திரா நிறுவனம், புதிய பொலேரோ நியோ+ ஆம்புலன்ஸை நகர்புறத்தில் இருந்து கிராமப்புறம் வரையிலான பகுதிகளில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸாக பயன்படுத்த, பொலேரோ நியோ வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் தேர்வு செய்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்த எஸ்யூவி காரில் முன் சக்கரங்களுக்கும், பின் சக்கரங்களுக்கும் இடையேயான தூரம் சற்று அதிகமாக இருப்பதாகும். இதனால், காருக்குள் நன்கு விசாலமான இடவசதி கிடைக்கிறது. இதனாலேயே, இந்த வாகனம் ஆம்புலன்ஸுக்கு ஏற்றதாக இருக்கும் என மஹிந்திரா நினைத்துள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பொலேரோ நியோ வாகனத்தில் ஆற்றல்மிக்க 2.2 லிட்டர் எம்ஹாவ்க் என்ஜின் பொருத்தப்படுகிறது. புதிய பொலேரோ நியோ+ ஆம்புலன்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கான விலையே. அதுவே, அரசாங்கத்திற்கான விலையாக ரூ.12.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜென்-3 சேசிஸில் அதி வலிமைமிக்க இரும்பு பாடி ஷெல்லில் உருவாக்கப்பட்ட புதிய பொலேரோ நியோ+ ஆம்புலன்ஸ் வாகனம் பின் சக்கரங்களின் மூலம் இயங்கக்கூடியதாக உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் எம்ஹாவ்க் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வாகனத்திற்கு வழங்கக்கூடியது. இதன் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.
வழக்கமான பொலேரோ நியோ எஸ்யூவி காரை விட சிறிது நீளமான வீல்பேஸில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நியோ+ ஆம்புலன்ஸின் உட்பக்கத்தில் ஒருவர் படுப்பதற்கு தேவையான நீளத்தில் ஸ்ட்ரெட்சர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கை கழுவும் இடம், சைரன் விளக்குகள் & ஒலி பெருக்கி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இதில், சைரன் விளக்கு ஆனது வாகனத்தின் மேற்கூரையில் ஒன்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உள்பட இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மொத்தம் 5 பேர் தாராளமாக பயணம் செய்யலாம். கேபின் முழுவதுமாக ஏசி காற்றை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் குறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவின் சிஇஓ நளினிகாந்த் கொல்லாகுண்டா கூறுகையில், "பொலேரோ நியோ+ ஆம்புலன்ஸின் அறிமுகத்தின் மூலம் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் மேலும் உறுதிப்படுத்துகிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான கார் ஆம்புலன்ஸ்கள் நடைமுறைக்கு மிகவும் ஏற்றவை ஆகும். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் விரைவாக பயணிப்பதற்கு இவ்வாறு எந்தவொரு மூலை முடுக்கிலும் புகுந்து செல்லக்கூடிய வாகனங்கள் சரியானவை. இதனால்தான் சமீப காலத்தில், மோட்டார்சைக்கிளில் கூட ஆம்புலன்ஸ் வந்துள்ளன.


Click it and Unblock the Notifications








