1 மணிநேரத்துக்கு ரூ.100 சேமித்து கொடுக்கும்!! மஹிந்திரா உருவாக்கி உள்ள தரமான சிஎன்ஜி டிராக்டர்!
மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors) நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் அதன் முதல் சிஎன்ஜி மோனோ ஃப்யுல் டிராக்டரை வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய மஹிந்திரா சிஎன்ஜி டிராக்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி டிராக்டர் நிறுவனங்களுள் ஒன்று மஹிந்திரா டிராக்டர்ஸ் ஆகும். இன்னும் சொல்ல போனால், மஹிந்திராவின் கார்கள் கூட சமீப காலமாக தான் வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால், மஹிந்திரா டிராக்டர்கள் கடந்த 20 - 30 வருடங்களாகவே இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.

குறிப்பாக, வேளாண் தொழிலை செய்யும் விவசாயிகள் மஹிந்திரா டிராக்டர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்றுவரும் மத்திய இந்தியாவின் மிக பெரிய வேளாண் கண்காட்சியான அக்ரோ விஷனில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜி மோனோ ஃப்யுல் டிராக்டரை வெளியீடு செய்துள்ளது.
இந்த புதிய சிஎன்ஜி டிராக்டரையும் மஹிந்திரா தனது வழக்கமான யுவோ டிராக்டர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கி உள்ளது. இந்த மஹிந்திரா டிராக்டர் வெளியீடு செய்யப்பட்டு உள்ள அக்ரோவிஷன் கண்காட்சி மொத்தம் 4 நாட்களுக்கு நடைபெறும். இந்த கண்காட்சியில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்துக் கொண்டுள்ளார்.

சிஎன்ஜி வாகனங்களை உருவாக்குவதில் கொண்டுள்ள நிபுணத்துவத்தை பயன்படுத்தி, உகந்த மாசு உமிழ்வு கட்டிப்பாடு, செயல்திறன் மற்றும் செயல்பாட்டு செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த டிராக்டரை மஹிந்திரா உருவாக்கி உள்ளது. சென்னைக்கு அருகே உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு சோதனைகளுக்கு பின் இந்த சிஎன்ஜி டிராக்டரை மஹிந்திரா உருவாக்கி உள்ளது.
டீசலில் இயங்கும் டிராக்டர்களுக்கு இணையான ஆற்றல் மற்றும் செயல்திறனை வழங்கக்கூடியதாக, விவசாயத்திற்கான மாற்று இயந்திர தொழிற்நுட்பத்தில் புதிய லிமிடெட்டை இந்த புதிய சிஎன்ஜி டிராக்டர் அமைக்கும் என மஹிந்திரா நம்புகிறது. சிஎன்ஜி வாகனங்களின் முக்கிய சிறப்பம்சமே அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதாகும்.

டீசல் டிராக்டர்களுடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி டிராக்டர்கள் மாசு உமிழ்வை கிட்டத்தட்ட 70% வரையில் குறைக்கின்றன. அதேபோல், குறைந்த என்ஜின் அதிர்வுகளினால் டீசல் டிராக்டர்களை காட்டிலும் சிஎன்ஜி டிராக்டர்கள் 3.5 டெசிபிள் குறைவான இரைச்சலை தருகின்றன. இதனால், வழக்கத்தை காட்டிலும் பயன்படுத்துபவரின் உடல் சோர்வடைவது குறையும்.
அதுமட்டுமின்றி, சிஎன்ஜி என்ஜின் செட்-அப்பில் என்ஜின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும். மஹிந்திராவின் இந்த புதிய சிஎன்ஜி டிராக்டரில் தலா 45 லிட்டர்கள் கொள்ளளவில் மொத்தம் 4 டேங்குகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் மொத்தமாக, 96 கிலோ சிஎன்ஜி-ஐ நிரப்பிக் கொள்ள முடியும். இதன் மூலமாக, டீசல் டிராக்டர்களை காட்டிலும் இத்தகைய டிராக்டர்களில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.100 சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி என்றால் வேறொன்றும் இல்லை, இயற்கை எரிவாயு ஆகும். இத்தகைய எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதற்கேற்பவே, மஹிந்திரா நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜி மோனோ ஃப்யுல் டிராக்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிஎன்ஜி டிராக்டர் எப்போது விற்பனைக்குவரும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









