இவ்வளவு சிறிய மஹிந்திரா காரில் சன்ரூஃப் வசதியா!! கார் வாங்கும் பிளானில் இருப்பவர்கள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
இன்றைய காலத்தில் கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) காரில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்கும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் கடந்த பல வருடங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது. நம் இந்திய மக்கள், அளவில் சற்று சிறியதான காம்பெக்ட் எஸ்யூவி கார்களை வாங்க போட்டி போட்டு வருகின்றனர். அத்தகைய பிரிவில் மஹிந்திரா சார்பில் விற்பனை செய்யப்படும் கார் எக்ஸ்யூவி300 ஆகும். எக்ஸ்யூவி700, ஸ்கார்பியோ என் மற்றும் தார் போன்ற சமீப ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து பல்வேறு கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், எக்ஸ்யூவி300 மஹிந்திராவின் சிறந்த விற்பனை மாடலாக விளங்குகிறது.

டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்குவதால், எக்ஸ்யூவி300 காரை அவ்வப்போது மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்து விடுகிறது. இந்த வகையில், எக்ஸ்யூவி300 காரில் பனோராமிக் சன்ரூஃப் அம்சத்தை வழங்க மஹிந்திரா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
எக்ஸ்யூவி300 காரில் அவ்வப்போது சிறு சிறு அப்டேட்கள் வழங்கப்படுமே அன்றி, பெரிய அளவிலான அப்டேட்களை இந்த கார் பெற்று நீண்ட வருடங்களாகிவிட்டது. இதன் காரணமாக, அடுத்த 2024ஆம் ஆண்டில் எக்ஸ்யூவி300 காருக்கு முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது. புதிய எக்ஸ்யூவி300 கார் மறைப்பால் மறைக்கப்பட்டு பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டதை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த நிலையில்தான், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் இணையத்தில் கசிந்துள்ளன. எக்ஸ்யூவி300 காரில் தற்சமயம் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்களிலும் இதேபோன்றதான சன்ரூஃப் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் எக்ஸ்யூவி300 காரை போல், டாடா நெக்ஸான் மற்றும் கியா சொனெட் கார்களும் விரைவில் முக்கியமான அப்டேட்களை பெறவுள்ளதை மறந்துவிட வேண்டாம்.
ஆனால் புதிய நெக்ஸான் மற்றும் சொனெட் கார்களில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. பனோராமிக் சன்ரூஃப் உடனான எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்களின் விற்பனை சிறப்பாக இருந்தால், நிச்சயமாக போட்டிக்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களும் தங்களது கார்களில் வழங்க முயச்சிக்கும். ஏற்கனவே கூறியதுதான், கார் வாங்கும் இந்திய மக்களின் விருப்பத்திற்குரிய அம்சமாக சன்ரூஃப் மாறி வருகிறது.

தற்சமயம், இந்தியாவில் விற்பனையாகும் 4இல் ஒரு கார் சன்ரூஃப் உடன் விற்பனையாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சன்ரூஃப் உடன் விற்பனை செய்யப்படும் கார்களின் விற்பனை ஆனது கடந்த 5 வருடங்களில் சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. வானத்தை பார்த்தவாறு காரில் பயணிக்க யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.
ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கார்களில் விலைமிக்க உயர் நிலை வேரியண்ட்களில் மட்டுமே சன்ரூஃப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை, ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார் சற்று மாற்றியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவ்வளவு சிறிய அளவிலான காரில் சன்ரூஃப் வழங்கப்படுவதே பெரிய விஷயம். ஆனால் ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டரின் எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) & எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் வேரியண்ட்களில் எலக்ட்ரிக் சன்ரூஃப்பை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில், தற்சமயம் எந்தவொரு காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் பனோராமிக் சன்ரூஃப் தற்போதுவரையில் வழங்கப்படுவது இல்லை. ஆதலால், அடுத்த 2024இல் பனோராமிக் சன்ரூஃப்பை பெறும் பட்சத்தில் இத்தகைய அம்சத்தை பெறும் முதல் காராக மஹிந்திரா எக்ஸ்யூவி300 விளங்கலாம். இதன்மூலம் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க மஹிந்திரா முயற்சிப்பது போல் தெரிகிறது. எக்ஸ்யூவி300 காருக்கு வழங்கப்பட்டால், விரைவில் எக்ஸ்யூவி400 காரும் பனோராமிக் சன்ரூஃப்பை பெறும்.


Click it and Unblock the Notifications









