இந்த மேட்-இன்-இந்தியா காரை தான் ஆஸ்திரேலியர்களும் ஓட்ட உள்ளனர்!! மஹிந்திரா செய்துள்ள தரமான சம்பவம்...
கம்பீரமான மஹிந்திரா எஸ்யூவி கார் என பெயர் பெற்ற எக்ஸ்யூவி700 ஆஸ்திரேலியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் ஆஸ்திரேலியாவில் எந்த விலைகளில், எந்தெந்த வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த எஸ்யூவி கார் ஆஸ்திரேலியா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் எக்ஸ்யூவி700 கார்கள் தான் ஆஸ்திரேலியாவில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளதாம்.

ஆஸ்திரேலியா நாட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஏ.எக்ஸ்7 மற்றும் ஏ.எக்ஸ்7எல் என்ற 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20.72 லட்சம் ஆகும். ஏ.எக்ஸ்7எல் வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.22.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏகப்பட்ட என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்வுகளில் எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே எக்ஸ்யூவி700 கார் கிடைக்கும். இந்தியாவிற்கு அடுத்து மஹிந்திராவின் முக்கியமான வெளிநாட்டு சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு தயாரிப்புகளை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இதில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 காருக்கு அந்த நாட்டில் 7-வருட/ 1.5 லட்ச கிமீ உத்தரவாதத்தை வழங்க மஹிந்திரா முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்யூவி700 கார் எந்தவொரு தோற்ற மாற்றமும் இன்றி ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காரில் வழங்கப்படும் தொழிற்நுட்ப வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் 10.25 இன்ச்சில் இரட்டை திரைகள், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் சோனி நிறுவனத்தின் 12-ஸ்பீக்கர் 3டி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்கு அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிராஃபிக் சிக்னலை அடையாளம் காணுவான் மற்றும் ஹை-பீம் அசிஸ்ட் உள்ளிட்டவை அடங்கிய அடாஸ் தொகுப்பு இடம்பெறுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் ஏற்கனவே கூறியதுபோல் எக்ஸ்யூவி700 காரை ஒரேயொரு 2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே பெற முடியும். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும். மேற்கூறப்பட்ட டர்போ என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஒரு காலத்தில் கார்கள் என்றாலே வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுவையே என்ற நிலை மாறி, தற்போது மேட் இன் இந்தியா கார்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்வது உண்மையில் நமக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். இதில் இருந்து இந்திய தயாரிப்புகளை வெளிநாட்டினரும் நம்புகின்றனர் என்பதை உணர முடிகிறது.


Click it and Unblock the Notifications








