Maruti Alto காரை இப்படியொரு பெயிண்ட்டில் பார்த்திருக்கீர்களா? வேற லெவல்ல இருக்கு... வீடியோ!!
லம்போர்கினி கார்களுக்கே உண்டான பளபளப்பான அடர் பச்சை நிறத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் ஒன்று பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் ஆல்டோ காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோ காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் இந்திய சந்தையில் அந்த அளவிற்கு பிரபலமான காராக ஆல்டோ விளங்குகிறது. தற்சமயம் ஆல்டோ கார் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே, ஆல்டோ கே10 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆல்டோ சந்தையில் பிரபலமானதற்கு காரணமே அதன் அளவில் சிறிய 800சிசி என்ஜின் தான்.

800சிசி என்ஜின் உடன் ஆல்டோ கார் 'ஆல்டோ 800' என அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பிரபலமான 800சிசி என்ஜின் உடனான ஆல்டோ 800 காரின் விற்பனையை சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்குவந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக ஆல்டோ 800 கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆல்டோ 800 காரின் விற்பனை நிறுத்தத்தால் கவலையில் இருக்கும் ஆல்டோ கார் ரசிகர்களுக்கு சற்று ஆச்சிரியம் அளிக்கும் விதமாக, ஆல்டோ 800 கார் ஒன்று லம்போர்கினி கார்களுக்கே உண்டான பளபளப்பான அடர் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்த பளபளப்பான அடர் பச்சை நிறத்தை வெர்டே எர்மேஸ் க்ரீன் என அழைக்கிறது. இந்த புதிய பிரத்யேக பெயிண்ட் உடன் இந்த குறிப்பிட்ட ஆல்டோ 800 காரில் மேலும் சில பாகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
More from DriveSpark
இந்த கஸ்டமைஸ்ட் ஆல்டோ கார் குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை மேலே காணலாம். புதிய பிரத்யேக பச்சை நிற பெயிண்ட்டாலும், புதிய பாகங்களினாலும் இந்த குறிப்பிட்ட ஆல்டோ 800 கார் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் இந்த ஆல்டோ 800 கார் 2010ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மாடல் ஆகும். அதாவது சுமார் 13 வருடங்கள் கழித்து இந்த ஆல்டோ 800 கார் புதிய தோற்றத்தை பெற்றுள்ளது.
மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த மாற்றங்களுக்கு முந்தைய காரின் தோற்றத்தையும் காணலாம். இந்த கஸ்டமைஸ்ட்சேஷன் பணிகளை மேற்கொண்ட நபர் காரை அறிமுகம் செய்வதில் இருந்து துவங்கும் மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் ஒவ்வொன்றும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. இதற்காக, தொழிற்நுட்ப மெக்கானிக்குகளின் தலைகளில் கோ புரோ கேமிரா பொருத்தப்பட்டு, அவர்களின் பணிகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இதன்படி பார்க்கும்போது, மெக்கானிக் முதலாவதாக காரின் நம்பர் பிளேட்டையும், முன்பக்க பம்பரையும் கழற்றி தனது வேலைகளை ஆரம்பிக்கிறார். அதன்பின் கதவு கார்ட்களை நீக்கும் அவர், ஜன்னல் கண்ணாடிகளையும் அதன்பின் கழற்றுகிறார். இந்த பழைய பாகங்களை கழற்றிய பின்னர் காரில் இருந்த டொக்குகளை சரிசெய்யும் பணியில் மெக்கானிக்குகள் இறங்குகின்றனர். இறுதியாக, லம்போர்கினி வெர்டே எர்மேஸ் பச்சை நிற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான மாடிஃபிகேஷன் வேலைப்பாடுகளை பல்வேறு கார்களில் இதற்குமுன் பார்த்துள்ளோம். ஆனால் இந்த குறிப்பிட்ட ஆல்டோ 800 கார் தனித்துவமாக பார்க்கப்படுவதற்கு இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள வெர்டே எர்மேஸ் பச்சை நிற பெயிண்ட் முக்கிய காரணமாகும். ஏனெனில் இவ்வாறான பச்சை நிறத்தில் லம்போர்கினி கார்களை தவிர்த்து, வேறெந்த பிராண்ட் கார்களையும் இதுவரையில் நாம் பார்த்ததில்லை.


Click it and Unblock the Notifications







