26 கிமீ மைலேஜ்! விலையும் கம்மி! இதுக்கு மேல என்னங்க வேணும்! போட்டி நிறுவனங்களின் குடுமியில் கை வைத்த மாருதி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) கார், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டிசைனை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட வழக்கமான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை போன்றேதான் அதன் சிஎன்ஜி வெர்ஷனும் உள்ளது. பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனவே எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், வீல் ஆர்ச்சுகள் மற்றும் தட்டையான பானெட் ஆகிய அம்சங்கள் தொடர்கின்றன.

வசதிகளை பொறுத்தவரையில் சற்றும் பஞ்சமில்லை. வேரியண்ட்களை பொறுத்து, எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, அலாய் வீல்கள், கீலெஸ் எண்ட்ரி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், அதே 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 98 பிஹெச்பி பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் 85 பிஹெச்பி மற்றும் 121 என்எம் ஆக குறைந்து விடும்.

எனினும் சிஎன்ஜி மாடல் என்பதால், சிறப்பான மைலேஜ் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு 25.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) கிடைக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதலில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான். LXi, VXi மற்றும் ZXi என மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், LXi வேரியண்ட்டின் விலை (Price) 9.14 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் VXi வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மறுபக்கம் ZXi வேரியண்ட்டின் விலை 11.89 லட்ச ரூபாய் ஆகும். ZXi வேரியண்ட்டில் ட்யூயல் டோன் ஆப்ஷனும் கூட கிடைக்கும். அதன் விலை 12.05 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது கவனிக்கத்தக்கது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை தொடர்ந்து, கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களின் சிஎன்ஜி மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி கார்களும் கூட, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








