Maruti Fronx விலை இவ்ளோதானா! குடும்பத்தோட போக சூப்பரான கார்! ஒரு லிட்டருக்கே இத்தன கிலோ மீட்டர் ஓடுமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இது எஸ்யூவி-கூபே (SUV-Coupe) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் உடனடியாக தொடங்கியது.

நீங்கள் வெறும் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இந்தியாவில் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 89 பிஹெச்பி மற்றும் 113 என்எம் ஆகும். அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவர் மற்றும் 147 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஃப்ரான்க்ஸ் காரும் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. இந்த காரின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். அதே சமயம் இந்த இன்ஜினின் ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும்.
மறுபக்கம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டர்போ பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும். இந்த இன்ஜினின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.01 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும். இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ள மைலேஜ் எண்கள் ஆகும்.
சிறப்பான மைலேஜ் வழங்குவதுடன், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் ஏராளமான வசதிகளையும் (Features) பெற்றுள்ளது. இதில், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை.
இவை எல்லாம் தவிர, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் மொத்தம் 8 கலர் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கிடைக்கும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) 7 லட்ச ரூபாய் அல்லது 8 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் முதலில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் நாட்களில் இந்த காரில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஃப்ரான்க்ஸ் காருக்கு அடுத்தபடியாக ஜிம்னி காரை மாருதி சுஸுகி (Maruti Suzuki Jimny) நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








