சாரே கொல மாஸ்! நாடே காத்து கிடந்த மாருதி கார் விலை இவ்ளோதானா! கொம்பன் இறங்கீட்டான்னு கதறும் போட்டி நிறுவனங்கள்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கூபே எஸ்யூவி (Coupe-SUV) ரக கார் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவிலேயே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அத்துடன் இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் அப்போதே தொடங்கி விட்டது.

11 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வரும் நிலையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இன்று (ஏப்ரல் 24) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவர் மற்றும் 147 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த காரில், சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
சிஎன்ஜி இன்ஜின், இதைக்காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்மா (Sigma), டெல்டா (Delta), டெல்டா ப்ளஸ் (Delta+), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கிடைக்கும். அதே சமயம் இந்த காரில் மொத்தம் 9 கலர் ஆப்ஷன்கள் (Colour Options) கொடுக்கப்பட்டுள்ளன.
அவை ஆர்டிக் ஒயிட், க்ராண்டுர் க்ரே, எர்த்தன் ப்ரவுன், ஸ்பெளின்டிட் சில்வர், ஒபுலெண்ட் ரெட், ப்ளூயிஷ் ப்ளாக் மேற்கூரையுடன் எர்த்தன் ப்ரவுன், ப்ளூயிஷ் ப்ளாக் மேற்கூரையுடன் ஒபுலெண்ட் ரெட், ப்ளூயிஷ் ப்ளாக் மேற்கூரையுடன் ஸ்பெளின்டிட் சில்வர் ஆகியவை ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.
இதில், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை எல்லாம் தவிர முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், 16 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் போன்ற அம்சங்களும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 7.46 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான விலையாக கருதப்படுகிறது. முதலில் 8 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதைக்காட்டிலும் குறைவான விலையில் களமிறக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். மாருதி சுஸுகி நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளதாலும், மைலேஜ், வசதிகள் மற்றும் டிசைன் என அனைத்து அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் இருப்பதாலும், ஃப்ரான்க்ஸ் கார் பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். அப்போது இதன் பல்வேறு அம்சங்கள் எங்களை வெகுவாக கவர்ந்தது. எனவே டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற போட்டி மாடல்களுக்கு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
மேற்கண்ட கார்கள் தவிர மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ரெனால்ட் கைகர் (Renault Kiger), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுடனும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போட்டியிடும். மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக ஜிம்னி (Maruti Suzuki Jimny) காரை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








