7 பேர் போனாலும் மைலேஜை வாரி வழங்கும்! டாடா, மஹிந்திராவிற்கு செக் வைக்கும் மாருதி! வேலையை ஆரம்பிச்சுட்டாங்க!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 சீட்டர் கார்கள் பொதுவாக 2 வரிசைகளை கொண்டதாக இருக்கும். இந்த 5 சீட்டர் கார்களில், மூன்றாவதாக ஒரு வரிசையை சேர்த்து, 7 சீட்டர் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்வது தற்போது 'டிரெண்ட்' ஆகி வருகிறது. ஹூண்டாய் (Hyundai) மற்றும் எம்ஜி (MG) உள்பட நிறைய நிறுவனங்கள் தங்கள் 5 சீட்டர் கார்களின் 7 சீட்டர் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை தலையில் சுமந்து கொண்டிருக்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki), தனது பிரபலமான 5 சீட்டர் கார் ஒன்றின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்று மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara). சமீபத்தில்தான் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது.

டாடா, மஹிந்திராவிற்கு செக்!
மாருதி க்ராண்ட் விட்டாரா கார் தற்போது 5 சீட்டர் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வருகிறது. ஆனால் டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) ஆகிய கார்களுக்கு போட்டியாக, க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதுதான் குறியீட்டு பெயரா!
மாருதி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷன் தற்போதைய நிலையில், Y17 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. மூன்றாவது வரிசை இடம்பெற வேண்டும் என்பதால், மாருதி க்ராண்ட் விட்டாரா காரை விட, இந்த புதிய 7 சீட்டர் மாடல் நீளமாக இருக்கும். அதே நேரத்தில் 5 சீட்டர் மாடலிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், 7 சீட்டர் மாடல் சற்று வேறு விதமாக டிசைன் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மைலேஜை வாரி வழங்கும்!
மாருதி க்ராண்ட் விட்டாரா காரின் 5 சீட்டர் மாடலில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், அதன் 7 சீட்டர் மாடலிலும் கொடுக்கப்படும் என தெரிகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஹைப்ரிட் இன்ஜின் என்பதாலும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் என்பதாலும், இந்த புதிய 7 சீட்டர் மாடலில், வாடிக்கையாளர்களுக்கு மைலேஜ் (Mileage) தாராளமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎன்ஜி ஆப்ஷன் இருக்குமா?
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் தற்போது சிஎன்ஜி (CNG) ஆப்ஷனுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 7 சீட்டர் மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி கார்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டாலும் வழங்கப்படலாம்.
விலை?
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி க்ராண்ட் விட்டாரா காரின் 5 சீட்டர் மாடலின் விலை (Price) 10.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.65 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனின் விலை இதை காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
நெக்ஸா ஷோரூம்கள்!
மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரீமியம் கார்களை நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. மாருதி க்ராண்ட் விட்டாரா கார் பிரீமியமான மாடல் என்பதால், நெக்ஸா ஷோரூம்கள் மூலம்தான் விற்பனையாகி கொண்டுள்ளது. எனவே இதன் 7 சீட்டர் மாடலும் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவே விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் மத்தியில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய 7 சீட்டர் மாடல், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








