மிடில்-க்ளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கிய செல்லப்பிள்ளை! ஆல்டோ யார்னு இப்ப எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்!
இந்திய வாடிக்கையாளர்களின் மனதிற்கு மிக நெருக்கமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) மற்றும் மாருதி 800 (Maruti 800) ஆகிய கார்களை போல், மாருதி சுஸுகி ஆல்டோ காருக்கும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் நிச்சயம் தனி இடம் உண்டு.
மாருதி சுஸுகி ஆல்டோ கார் கடந்த 2000ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 23 வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில், மாருதி சுஸுகி ஆல்டோ கார் விற்பனையில் புதிய மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 45 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி ஆல்டோ கார் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு மாருதி சுஸுகி ஆல்டோ கார் 30 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்தது.
அடுத்த சுமார் 7 ஆண்டுகளில் மேலும் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி ஆல்டோ காரை வாங்கியுள்ளனர். ஆக மொத்தத்தில் சுமார் 23 ஆண்டுகளில் 45 லட்சம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற காராக மாருதி சுஸுகி ஆல்டோ உருவெடுத்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனைதான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் மூத்த செயல் அலுவலர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்), வாடிக்கையாளர்களுடன் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை ஆல்டோ ஏற்படுத்தியுள்ளது.
ஆல்டோ காரின் நம்ப முடியாத பயணத்தை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆல்டோ கார் 45 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருப்பது, வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று ஆகும். இது மற்ற நிறுவனங்களால் படைக்க முடியாத ஒரு சாதனை'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு இல்லை என்பது போன்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும், மாருதி சுஸுகி ஆல்டோ காரை வாடிக்கையாளர்கள் மிகவும் நேசிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விலை மிகவும் குறைவு என்பதுதான் முதல் காரணம். அத்துடன் இந்த காரை பராமரிப்பதும் மிகவும் எளிமையானது. பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவாகவே வரும்.
அத்துடன் இது சிறிய ஹேட்ச்பேக் ரக காராக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதும் எளிது. ஓரளவிற்கு அனுபவம் உள்ளவர்களாலும் கூட, மாருதி சுஸுகி ஆல்டோ காரை மிக எளிதாக ஓட்டி விட முடியும். இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் ஆல்டோ காரை வாங்கி குவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications