மாருதி சுஸுகியின் இந்த கார் நம் நாடு முழுவதும் இருக்கு!! ஜப்பான்-ஸ்டைல் கார்... இந்தியர்களை கவர்ந்துடுச்சு
1999இல் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து பலேனோ செடான் கார் முதன்முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஜப்பானில் நல்ல வெற்றி இருப்பினும் நம் நாட்டு மக்கள் பலேனோ செடான் காரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015இல் உடலமைப்பை மாற்றி ஹேட்ச்பேக் காராக மீண்டும் பலேனோவை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. ஆனால் இம்முறை பலேனோ மிக பெரிய வெற்றி.
2015இல் துவங்கிய விற்பனை ஓட்டம் இப்போது வரையில் முடியவில்லை. கடந்த 2023 மே மாதத்தில் கூட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் பலேனோ ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 10 ஆயிரம் பலேனோ கார்களாவது விற்பனையாகிவிடும் நிலையில், இந்த காரில் அப்படி என்ன உள்ளது? என்ற கேள்விக்கு பதில்களாக பலேனோவின் 5 வெற்றி இரகசியங்களை இனி பார்க்கலாம்.

டிசைன்: மாருதி சுஸுகியின் "கிராஃப்டர் எதிர்காலம்" என்ற டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட ஹேட்ச்பேக் கார் பலேனோ ஆகும். இந்த காரின் வெளிப்பக்க தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. குறிப்பாக, வெளிப்புறத்தில் இருக்கும் நேர்த்தியான லைன்கள் பலேனோவை ஏரோடைனாமிக்ஸிற்கு ஏற்ற காராக வெளிக்காட்டுகின்றன. ஜன்னல் கண்ணாடிகளுக்கு கீழ் மற்றும் முன்பக்க க்ரில் பகுதிகளில் வழங்கப்படும் க்ரோம் ஸ்ட்ரிப்புகள் காரை விலையுயர்ந்ததாக காட்டுகின்றன.
உட்பக்க தோற்றம்: பலேனோவின் உட்பக்கத்தில் சவுகரியத்திற்கு எந்த விதத்திலும் குறையில்லை. குறிப்பாக, முன் இருக்கைகள் நன்கு குஷின் உடன் வழங்கப்படுகின்றன. பின் இருக்கையில் அமர்பவர்களுக்கும் போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இடவசதிகள் கிடைக்கின்றன. பின்பக்க இருக்கையை 60க்கு 40 விகிதத்தில் மடக்குவதன் மூலம் பின்னால் நிறைய பொருட்களை வைத்து எடுத்து செல்லலாம்.

மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள்: விற்பனை நல்லப்படியாக இருப்பதால் அவ்வப்போது அப்டேட் செய்து பலேனோவின் ஆயுட்காலத்தை மாருதி சுஸுகி நீட்டித்து வருகிறது. ஒவ்வொரு முறை அப்டேட்டின்போதும் புது புது மாடர்ன் வசதிகள் வழங்கப்படுவதால், 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அர்காமைஸ் ஸ்டேரியோ சிஸ்டம் மற்றும் ஹெட்-அப் திரை உள்ளிட்டவை பலேனோவில் இடம்பெறுகின்றன.
சிறப்பான மைலேஜ்: மாருதி சுஸுகி கார்கள் என்றாலே நன்கு மைலேஜ் கொடுப்பவை என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதிலிலும் பலேனோ சற்று கூடுதல் சிறப்பாக, மேனுவல் தேர்வில் 22.35கிமீ பயணத்தை 1 லிட்டர் பெட்ரோலிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் 22.94kmpl மைலேஜ் வரையிலும் வழங்குகிறது. கார் நியூட்ரலில் இருக்கும்போது என்ஜினை ஆஃப் செய்துவிடக்கூடிய ஐடியல் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழிற்நுட்ப வசதியும் பலேனோவில் கிடைக்கிறது.

கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார்: 360-கோண கேமிரா, ஹெட்-அப் டிஸ்பிளே மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை வழங்கப்பட்டாலும், பலேனோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.61 லட்சத்தில் இருந்து ரூ.9.88 லட்சம் வரையில் உள்ளன. பலேனோவை பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே பெற முடியும். இதனால் டீசல் என்ஜின் உடன் பலேனோவை வாங்கியவர்களை பார்த்து பொறாமைப்படும் நிலை வராது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பலேனோ ஹேட்ச்பேக் காரின் தோற்றம், குறைந்த விலையில் கார் வாங்க விரும்புவோரை வெகுவாக கவர்ந்து விடுகிறது. இதன் காரணமாகவே அத்தகையவர்கள் கூடுதல் தொகையை செலுத்தி பலேனோ காரை எப்படியாவது கஷ்டப்பட்டு வாங்கி விடுகின்றனர். இதுதான், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் விற்பனையில் மாருதி சுஸுகி பலேனோ முதலிடத்தில் இருப்பதற்கு மேற்கூறப்பட்ட எல்லாவற்றையும் விட முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications









