Maruti Suzuki உற்பத்தி செஞ்ச கார்களில் பிரச்சனையா... காரை வாங்கியவர்களே உஷார்!!
விற்பனை செய்ததே ஞாபகம் இல்லை, அதில் பழுதுகள் வேறயா? என கேட்க தோன்றும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யப்பட்ட அதன் பலேனோ ஆர்.எஸ் (Baleno RS) கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. திரும்ப அழைப்பது என்றால் என்ன? எத்தனை பலேனோ ஆர்.எஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
விற்பனை செய்யப்பட்ட கார்கள் பின்னர் அவற்றில் சில பழுதுகளை உற்பத்தி செய்த நிறுவனம் கண்டறிந்ததன் காரணமாக திரும்ப அழைக்கப்படுவது, அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றே. மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற லக்சரி கார்கள் உற்பத்தியில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனங்கள் கூட தங்களது கார்களை விற்கப்பட்டதற்கு பிறகு திரும்ப அழைத்துள்ளன. அந்த வகையில், தற்போது இந்தியாவின் நம்பர்.01 கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியும் தனது பலேனோ ஆர்.எஸ் கார்களை திரும்ப அழைக்கிறது.

பலேனோ கார் தெரியும், அது என்ன பலேனோ ஆர்.எஸ்? என நீங்கள் கேட்கலாம். பலேனோ ஆர்.எஸ் (RS- Road Sport), 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் பலேனோவின் ஆற்றல்மிக்க வெர்சனாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலேனோ ஆர்.எஸ் காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டது. ஆனால் சில வருடங்களில் இந்த டர்போ என்ஜினை பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்கிரேட் செய்ய முடியாத காரணத்தினால்தான் பலேனோ ஆர்.எஸ் காரின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுத்தியது.
ஆம்... பலேனோ ஆர்.எஸ் கார் தற்சமயம் விற்பனைக்கு கிடைப்பதில்லை. 2017-2020 என குறுகிய காலத்தில் மட்டுமே விற்பனையில் இருந்த இந்த காரின் 7,213 யூனிட்களை திரும்ப அழைப்பதாக தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. காரின் பிரேக் அமைப்பு செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் வாக்யூம் பம்ப் -இல் கண்டறியப்பட்ட பழுதை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மாருதி சுஸுகி நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இந்த வாக்யூம் பம்ப் பிரச்சனையால் பிரேக் பெடலை கூடுதல் வலுவோடு அழுத்தி வேண்டி வரலாம். இந்த பிரச்சனை மிகவும் அரிதாகவே குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த 7,213 பலேனோ ஆர்.எஸ் கார்களில் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறும் மாருதி சுஸுகி நிறுவனம், இருந்தாலும் முன்னெச்சரிக்கையாகவும், நிறுவனத்தின் பெயருக்கு எந்த களங்கமும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவும் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை செயல்படுத்த உள்ளது.
இந்த திரும்ப அழைப்பில் அடங்கும் 7,213 பலேனோ ஆர்.எஸ் கார்கள் 2016 அக்டோபர் 27ஆம் தேதியில் இருந்து 2019 நவம்பர் 1ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்டவை ஆகும் (காரின் அறிமுகம் தான் 2017, ஆனால் உற்பத்தி பணிகள் 2016லேயே துவங்கிவிட்டன). இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பிரேக் செயல்பாட்டிற்கு உதவும் வாக்யூம் பம்ப் (பாகங்கள்)-இல் பழுது ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப் பட்டுள்ளது.

இதன் விளைவாக, அரிதாக பாதிக்கப்படும் வாகனங்களில் பிரேக் பெடலை செயல்படுத்துவதற்கு விசையை அதிகரிக்க வேண்டிவரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட பலேனோ ஆர்.எஸ் கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களால் தொடர்பு கொள்ளப்படுவர். பழுதான பாகங்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி, இலவச மாற்றி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பரவாயில்லையே விற்பனை செய்து இத்தனை வருடங்கள் கழித்து காரில் பழுதை கண்டறிந்து, நம்மை மாருதி சுஸுகி எச்சரிக்கிறதே என உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த வேலையை முன்கூட்டியே செய்திருந்தால், காரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு டீலர்ஷிப் ஷோரூமுக்கு மீண்டும் காரை கொண்டுவர வேண்டிய அசவுகரியம் ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது... மனித பிழைகள் ஏற்படுவது சகஜம் தானே என சொல்லி கொண்டு கடந்து செல்ல வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications









