Tata Nexon காருக்கே விற்பனையில் டஃப் கொடுக்கும் Maruti Suzuki... அதிக பேரது சாய்ஸ் இதுதான்!!
அளவில் மிகவும் பெரியதாக இருக்கக் கூடாது, அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல், பட்ஜெட் விலையில் கார் விரும்புவர்களுக்கு சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் சிறந்த சாய்ஸாக இருக்கும். அத்தகைய எஸ்யூவிகள் தற்சமயம் 8 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை கடந்த 2023 மார்ச் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
சாலைகளில் ஒரு காலத்தில் செடான் கார்களே அங்கும் இங்குமாக பறந்து கொண்டு இருந்தன. ஆனால் சமீப ஆண்டுகளில் எஸ்யூவி கார்களுக்கான தேவை எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனி குடும்பமாக, 4-5 நபர்கள் பயணிப்பதற்கு போதுமான இடவசதி கொண்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் நன்கு பிரபலமாகி உள்ளன. இருப்பினும் சில நிறுவனங்கள் இப்போதும் அவற்றின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துவதில் போராடி கொண்டு இருக்கின்றன.

இதில் முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தைதான். ஏனெனில் இதன் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான டபிள்யூ.ஆர்.வி கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 3 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2022 மார்ச் மாதத்தில் 251 டபிள்யூ.ஆர்.வி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் மொத்தம் 8 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறினோம் அல்லவா, அதில் கடந்த மாத விற்பனையில் 8வது இடத்தில் இந்த ஹோண்டா கார் உள்ளது.
இதற்கடுத்து 7வது இடத்தில் 1,568 யூனிட்களின் விற்பனை உடன் ரெனால்ட் கைகர் உள்ளது. கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 2,496 கைகர் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. இவ்வாறு கடைசி இரு இடங்களில் உள்ள இந்த இரு மாடல்களின் விற்பனை மட்டும் 2022 மார்ச் உடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மற்றவைகளின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கைகரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிஸான் மேக்னைட் இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ளது.

கடந்த மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட மேக்னைட் கார்களின் எண்ணிக்கை 3,260 யூனிட்களாகும். ஒரே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், கைகரை காட்டிலும் மேக்னைட்டின் விற்பனை டபுள் மடங்காக உள்ளதை இந்த இடத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும். 5வது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யூவி300 கார்களின் எண்ணிக்கை 5,128 ஆகும்.
ரெனால்ட்-நிஸானை போன்று, தென்கொரிய நிறுவனங்களான ஹூண்டாய்-கியா கூட்டணியில் உருவாக்கப்பட்ட கியா சொனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இவை இரண்டும் முறையே 8,677 மற்றும் 10,024 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2022 மார்ச் உடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச்சில் அதிகரித்துள்ளது.

இவற்றை தொடர்ந்து, 2வது இடத்தில் டாடா நெக்ஸான் உள்ளது. நெக்ஸான் கார்களின் விற்பனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே சிறப்பாக இருந்து வருகிறது. 2022 மார்ச்சில் 14,315 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2023 மார்ச்சில் 14,769 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதலிடத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 16,227 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2022 மார்ச்சில் அந்த சமயத்தில் விற்பனையில் இருந்த விட்டாரா பிரெஸ்ஸா கார் 12,439 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், கடந்த 1 வருடத்திற்கும் மேலாக விற்பனையில் ஜொலித்துவரும் நெக்ஸானை முந்துவதற்காகவே மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை வெறும் பிரெஸ்ஸா பெயரில் அறிமுகப்படுத்தியது. இன்னும் சில மாதங்களில் பிரெஸ்ஸா, நெக்ஸான் இடையே பலத்த போட்டி நிலவும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









