பேரதிர்ச்சி... டாடாவை தலையில் தட்டி உட்கார வைத்த மாருதி... இதுல இருந்து மீண்டு வர்றதுலாம் ரொம்ப கஷ்டம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 15,787 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 9,256 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 71 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்தியாவில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா தன்வசப்படுத்தியுள்ளது.

டாடா நெக்ஸான் (Tata Nexon) கார்தான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் மிக முக்கியமான போட்டி மாடல் ஆகும். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா நெக்ஸான் காரை விட, 1,873 பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை வெறும் 13,914 மட்டுமே.
இந்திய சந்தையில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து டாடா நெக்ஸான்தான், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை தன்வசம் வைத்திருந்தது. தற்போது டாடா நெக்ஸான் காரின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் முதலிடத்திற்கு வந்துள்ளது. மாருதி சுஸுகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், டாடா ரசிகர்களுக்கு கவலையையும் இது ஏற்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் ஏராளமான வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா தற்போது முதலிட அரியணையில் ஏறியுள்ளது.
இதுதவிர நடப்பாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி (CNG) மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வரும் வாரங்களில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய மாடலின் வருகை, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியை சமாளிக்கும் வகையில் நெக்ஸான் காரை மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யும் பணிகளை டாடா நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. டாடா நெக்ஸான் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வரும் காலங்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் இடையேயான போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications