27 கிமீ மைலேஜ் தரும் மாருதி காருக்கு புக்கிங் தொடங்கியது! பாதுகாப்பில் டாடாவுக்கே சவால் விடும்! விலை இவ்ளோதானா
இந்தியாவில் வழக்கமான பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கை இழந்து வருகின்றன. அதற்கு பதிலாக சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இவற்றை இயக்குவதற்கு குறைவான செலவு மட்டுமே ஆகும் என்பதுதான் இதற்கு காரணம்.
எனவே ஏராளமான நிறுவனங்கள், ஏற்கனவே விற்பனையில் உள்ள தங்கள் பெட்ரோல்/டீசல் கார்களின் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் ஒன்றாகும். மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

ஆனால் தனது கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை தொடர்ச்சியாக விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டுள்ளது. இதில் விடுபட்டு போயிருக்கும் ஒரு கார் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆனால் கூடிய விரைவில் இதன் சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. வெறும் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில், 1.5 லிட்டர் K15C பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை உருவாக்கும். அதே சமயம் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88 ஹெச்பி பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனை வழங்கும்.
இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமல்லாது, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும் முதல் சிஎன்ஜி கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 27 கிலோ மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களை கவரும் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கலாம். டிசைனை (Design) பொறுத்தவரையில், வழக்கமான பிரெஸ்ஸா காரை போன்றேதான் அதன் சிஎன்ஜி வெர்ஷனும் கிட்டத்தட்ட இருக்கும்.
இருப்பினும் சிஎன்ஜி வெர்ஷன் என்பதை வேறுபடுத்தி காட்டும் வகையில், வெளிப்புறத்தில் பேட்ஜ்கள் வழங்கப்பட்டிருக்கும். அதே சமயம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சமிருக்காது என நாம் எதிர்பார்க்கலாம். இதன்படி ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் உடன் 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.
இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், வாய்ஸ் அஸிஸ்டன்ட், ரியர் வியூ கேமரா மற்றும் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. மைலேஜை வாரி வழங்க கூடிய அதே சமயம் ஏராளமான வசதிகள் நிரம்பிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை (Price) 9 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காருக்கு போட்டியாக டாடா மற்றும் கியா ஆகிய 2 நிறுவனங்களும் தங்களின் நெக்ஸான் மற்றும் சொனெட் ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. எனவே வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி நிச்சயமாக அனல் பறக்கும்.


Click it and Unblock the Notifications








