டப்பா டான்ஸ் ஆடுது! மாருதி நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா! மறுபடியும் எந்திரிக்கறது ரொம்ப கஷ்டம்!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 1,39,347 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,53,149 கார்களை விற்பனை செய்திருந்தது.
இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை 9.9 சதவீதம் குறைந்துள்ளது. நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது என்பதும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,59,044 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,39,347 ஆக சுருங்கி விட்டது. இது 14.1 சதவீத வீழ்ச்சி ஆகும். எலெக்ட்ரானிக் பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் உற்பத்தியில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதால், அதன் விளைவாக விற்பனையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆல்டோ (Alto), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), இக்னிஸ் (Ignis), ஸ்விஃப்ட் (Swift), வேகன் ஆர் (Wagon R), செலிரியோ (Celerio), டிசையர் (Dzire), சியாஸ் (Ciaz), பலேனோ (Baleno), எர்டிகா (Ertiga), எக்ஸ்எல்6 (XL6), ஈக்கோ (Eeco), பிரெஸ்ஸா (Brezza) மற்றும் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது.
இதில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா இந்திய சந்தைக்கு புது வரவாகும். சமீபத்தில்தான் இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹைப்ரிட் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் முறையே, க்ரெட்டா மற்றும் செல்டோஸ் கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனமும் வெகு விரைவில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, ஹோண்டா (Honda) நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் மாதங்களில் இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரையில் வெகு விரைவில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) கண்காட்சிக்கு தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இதில், புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எலெக்ட்ரிக் கார் ரசிகர்கள் மத்தியில், 2023 ஆட்டோ எக்ஸ்போ பெரும் ஆவலை தூண்டியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாக்களில் ஒன்றான ஆட்டோ எக்ஸ்போ இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications