மாருதியின் இந்த காரை இப்ப நம்பி வாங்கலாம்.. புதுசா சில கருவிகளை சேத்திருக்காங்க! என்ன தெரியுமா அது?
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் சியாஸ் (Ciaz)-ம் ஒன்று. இந்த காரை நிறுவனம் அதிக பாதுகாப்பான காராக உயர்த்தி தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மாருதி சுஸுகியின் தயாரிப்பு என்றாலே பாதுகாப்பு கொஞ்சம்கூட இருக்காது என்கிற கருத்து பலரிடையே பரவலாகக் காணப்படுகின்றது.
இந்த கருத்தை உடைத்தெறிய பல்வேறு விதமான முயற்சிகளை மாருதி சுஸுகி மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அதன் முக்கிய தயாரிப்புகளில் பாதுகாப்பை கருவிகளை அதிகளவில் நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் மாருதி சுஸுகி சியாஸ் காரும் புதிதாக அதிக அளவில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனமாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி அம்சம்
ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) வசதி உடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி (Electronic Stability Program) சிஸ்டம், இரு ஏர் பேக்குகள் (Airbags) மற்றும் ரியர் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் (Rear Parking sensors) என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
இதில், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி அம்சமானது சியாஸின் அனைத்து வேரியண்டுகளிலும் காணப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, இதனை சியாஸில் ஸ்டாண்டர்டு அம்சமாக மாருதி சுஸுகி வழங்க இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக பயணிகளின் பாதுகாப்பு இரட்டிப்பாகும். எனவேதான் இதனை அனைத்து வேரியண்டுகளிலும் மாருதி கட்டாயமாக்கி இருக்கின்றது.
இன்னும் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் சியாஸில் உண்டு
இது தவிர அட்வான்ஸ்டு தொழில்நுட்ப கருவிகளும் புதிய சியாஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. முன்னதாக பார்த்த பாதுகாப்பு அம்சங்களுடன் சேர்த்து 20 க்கும் மேற்பட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. சியாஸ் ஓர் செடான் ரக காராகும். இது ஓர் பிரீமியம் ரக காராகும். அதிகளவில் பிரீமியம் தர அம்சங்களை இந்த காரில் காணலாம்.
நெக்ஸா ஷோரூமில் மட்டுமே கிடைக்கும்
இந்த காரணத்தினாலேயே இந்த காரை தனது பிரீமியம் தயாரிப்புகளுக்கான பிரத்யேக ஷோரூமான, நெக்ஸா வாயிலாக சியாஸை மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து புதிய நிற தேர்விலும் சியாஸை வழங்க இருக்கின்றது மாருதி சுஸுகி. புதிதாக மூன்று டூயல் டோன் நிற தேர்வுகள் சியாஸ் காரில் இணைக்கப்பட்டு உள்ளன.
புதிய நிற தேர்வுகள்
கருப்பு நிற ரூஃப் - பியர்ல் மெட்டாலிக் ஒபுலண்ட் (Pearl Metallic Opulent Red with Black Roof), ருப்பு நிற ரூஃப் - பியர் மெட்டாலிக் கிராண்டியர் கிரே (Pearl Metallic Grandeur Gray with Black roof) மற்றும் ருப்பு நிற ரூஃப் - டிக்னிட்டி பிரவுன் (Dignity Brown with Black Roof) ஆகியவையே அந்த டூயல் டோன் நிற தேர்வுகள் ஆகும்.
இதுதவிர 7 விதமான ஒற்றை நிற தேர்விலும் சியாஸ் செடான் காரை வாங்கிக் கொள்ள முடியும். புதிய டூயல் டோன் நிற தேர்விற்கு அறிமுக விலையாக 11 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆல்ஃபா டூயல் டோன், மேனுவல் வேரியண்டின் விலை ஆகும். இதேபோல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கும்
இதன் விலை 12 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். இந்த இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. நாடு முழுவதிலும் உள்ள 285 நகரங்களில் மாருதி சுஸுகியின் நெக்ஸா ஷோரூம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அனைத்து ஷோரூம்களிலும் புதிய மாருதி சுஸுகி சியாஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அட இவ்ளோ மைலேஜ் தருமா?
புதிய சியாஸ் காரில் 104.6 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மேனுவல் வேரியண்ட் 20.65 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 20.4 கிமீ மைலேஜையும் வழங்கும். இரண்டும் ஒரு லிட்டருக்கு தரக் கூடிய மைலேஜ் விபரம் ஆகும். மாருதி சுஸுகி வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின் வாயிலாகவே இந்த மைலேஜ் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








