1 லட்சத்திற்கும் அதிகமானோர் புக்கிங் செய்த மாருதி நிறுவனத்தின் கார்! எதுக்கு இவ்வளவு கிராக்கி தெரியுமா?
மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த காரை புக்கிங் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக இருக்கிறது. தற்போது வரை ஒட்டு மொத்த கார் விற்பனையில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி தான். என்னதான் ஒட்டு மொத்த கார் விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தாலும், எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனம் பெரிதாக ஜொலிக்கவில்லை என பேசப்பட்டது.

மாருதி நிறுவனத்தைவிட ஹூண்டாய், டாடா நிறுவனங்களின் கார்கள் தான் எஸ்யூவி செக்மெண்டில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதனால் மாருதி நிறுவனம் தனது எஸ்யூவி செக்மெண்டை மேம்படுத்த முடிவு செய்தது. முதலில் பிரெஸ்ஸா காரை மட்டுமே இந்த செக்மெண்டில் மாருதி நிறுவனம் விற்பனை செய்து வந்தாலும் அடுத்தடுத்து புதிய கார்களை களம் இறக்க முடிவு செய்தது.
அதற்காக இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராண்ட் விட்டாரா என்ற ஹைபிரிட் தொழிற்நுட்பம் கொண்ட காரை எஸ்யூவி செக்மெண்டில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பைப் பெற்றது. மாருதி ரசிகர்கள் பலர் இந்த காரின் வருகைக்காகக் காத்திருந்த நிலையில் பலர் கார் அறிமுகப்படுத்தப்பட்டதும் புக்கிங் செய்து வந்தனர்.

1 லட்சம் புக்கிங் - 1 Lakh Booking
இந்நிலையில் இந்த காருக்கு மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங் குவிந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 90 ஆயிரம் கார்கள் டெலிவரிக்காக காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாகும் எனத் தெரியவந்துள்ளது. சுமார் 1 ஆண்டுகள் வரை இதன் காத்திருப்பு காலம் செல்லும் எனக் கணிக்கப்படுகிறது.
இன்ஜின் - Engine
இந்த மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை மாருதி நிறுவனத்தின் கே-சிரீஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 99 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது போக இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்டில் இருக்கிறது.

சிஎன்ஜி - CNG
இதே காரில் சிஎன்ஜி வேரியன்டும் அறிமுகமாகியுள்ளது. இது 86.63 பிஎச்பி பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்கார் கடந்த 2022 செப்டம்பர் மாதம் அறிமுகமான நிலையில் புக்கிங் துவங்கப்பட்டு தற்போது பரபரப்பாக டெலிவரி நடந்து கொண்டிருக்கிறது. இந்த காரை சாலையில் பார்த்ததும் பலர் இந்த காரை புக்கிங் செய்கின்றனர்.
விலை - Price
இந்த கார் மார்கெட்டில் ரூ10.45 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. மொத்தம் 4 வேரியன்ட்கள் உள்ள அதிகபட்ச வேரியன்டின் விலை ரூ19.45 லட்சமாகும். இந்த காரில் மைல்டு ஹைபிரிட், ஸ்டிராங் ஹைபிரிட், 4 வீல் டிரைவ், ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது. இது போக இந்த கார்தான் எஸ்யூவி செக்மெண்டிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட ஒரே காராகும். கிராண்ட் விட்டா எஸ்-சிஎன்ஜி காரின் விலை ரூ12.85 லட்சம் முதல் ரூ14.84 லட்சம் வரை விற்பனையாகிறது.

மைலேஜ் - Mileage
இந்த காரின் மைலேஜை பொருத்தவரை சிஎன்ஜி வேரியன்ட் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.6 கி.மீ மைலேஜையும், ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 கி.மீ மைலேஜையும், மைல்டு ஹைபிரிட் வேரியன்ட் 20 கி.மீ மைலேஜையும் வாரி வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications
