மாருதி சுஸுகியால் மட்டுமே இது சாத்தியம்!! மற்ற நிறுவனங்கள் போராடுது... செடான் கார்களை ஓரங்கட்டும் இந்தியர்கள்!
புதியது, புதியதாக எஸ்யூவி மற்றும் கிராஸ் ஓவர் கார்கள் வந்தாலும், செடான் கார்களை வாங்குவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது. அந்த கூட்டம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்றாலும், ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையிலான செடான் கார்கள் சந்தையில் விற்பனையாகுகின்றன.
அந்த வகையில் கடந்த 2023 ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களின் விற்பனை நிலவரத்தை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். மாருதி சுஸுகி டிசைர், இந்தியாவில் தற்போதைய சூழலில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகும் ஒரே செடான் கார். இன்னும் சொல்லப்போனால், செடான் கார்களை வாங்க நினைக்கும் 5இல் 2 பேரது தேர்வு டிசைர் காராகவே உள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி டிசைர் செடான் கார்களின் எண்ணிக்கை 13,395 ஆகும். 2022ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான டிசைர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் துல்லியமாக பார்த்தால், 2022 ஜூலையை காட்டிலும் கடந்த ஜூலை மாதத்தில் 352 டிசைர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2023 ஜூன் மாதத்தில் 9,322 செடான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
மொத்த செடான் கார்களில் டிசைர் செடான் கார்களின் விற்பனை பங்கு ஆனது 40.29% ஆகும். மாருதி சுஸுகி டிசைருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா செடான் மாடல் உள்ளது. ஆனால் டிசைருக்கும், அவ்ராவுக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. ஏனெனில் கடந்த ஜூலையில் 4,514 அவ்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

2022 ஜூலை மாதத்தில் வெறும் 4,018 அவ்ரா கார்களை மட்டுமே ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2023 ஜூன் மாதத்தில் 4,907 அவ்ரா கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தில் ஹோண்டா அமேஸ் 3,386 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இந்த ஹோண்டா செடான் காரும் இதனை காட்டிலும் 2022 ஜூலையில் குறைவாகவும், கடந்த 2023 ஜூன் மாதத்தில் அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸின் லேட்டஸ்ட் பிரீமியம் தர செடான் காரான வெர்னா 2,858 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் 4,001 யூனிட்களின் விற்பனை உடன் வெர்னா 3வது இடத்தை பிடித்திருந்தது. இந்த வகையில் வெர்னா கார்களின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 28.57% குறைந்துள்ளது. ஆனால் 2022 ஜூலை மாதத்தில் வெறும் 1,870 வெர்னா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவின் விலை குறைவான செடான் கார்களுள் ஒன்றான டாடா டிகோர் இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. 2022 ஜூலை மாதத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான டிகோர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2023 ஜூலை மாதத்தில் பாதியாக குறைந்து, 2,694 டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் ஓரளவிற்கு பரவாயில்லை என சொல்லும் அளவிற்கு, 3,335 டிகோர் கார்கள் விற்கப்பட்டு இருந்தன.
ஆக, டிகோர் கார்களின் விற்பனை எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருவதால், இந்த காரை அப்டேட் செய்ய வேண்டிய சூழலில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,737 மற்றும் 1,654 ஆகும். 8வது மற்றும் 9வது இடங்களில் ஹோண்டா சிட்டி (1,478) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (1,348) செடான் கார்கள் உள்ளன. கடைசி 10வது இடத்தில் டொயோட்டா காம்ரி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேற்கூறப்பட்டுள்ள 10 செடான் கார்களில் ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி உள்ளிட்ட சில மாடல்கள் சமீபத்தில்தான் அப்டேட் செய்யப்பட்டன. அதேபோல், ஸ்கோடா - ஃபோக்ஸ்வேகன் கூட்டணியில் உருவாகிய விர்டுஸ் மற்றும் ஸ்லாவியா கார்களும் அறிமுகமாகி 1 வருடம் தான் ஆகிறது. இருப்பினும், அவற்றின் விற்பனை எண்ணிக்கை 1,000- 2,000 என்ற அளவிலேயே பதிவாகிறது. இதற்கு முக்கிய காரணம், வாடிக்கையாளர்களின் இரசனை எஸ்யூவி கார்களின் மீது சாய்ந்து வருவதாகும்.


Click it and Unblock the Notifications









