ரூ.30 லட்சத்துல மாருதி சுஸுகி காரா... வாங்குறதுக்கு ஆள் ரெடியா இருக்காங்களா? டொயோட்டா இன்னோவாவின் இடம் காலி!!
இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வர உள்ள புதிய மாருதி என்கேஜ் (Maruti Engage) ஹைப்ரீட் கார் குறித்த புதிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது ஊரறிந்த விஷயம். இதனாலேயே இந்த இரு நிறுவனங்களும் தங்களது கார்களை ஒரே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்குகின்றன. இதனால் உற்பத்தி செலவு மிகவும் மிச்சமாகும். முன்பு விற்பனையில் இருந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் காரை உருவாக்கி, விற்பனைக்கு கொண்டுவந்தது. அர்பன் க்ரூஸரும் தற்சமயம் விற்பனையில் இல்லை.

பின்னர் மாருதி சுஸுகியின் பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா கார்களின் அடிப்படையில் கிளான்ஸா மற்றும் ஹைரைடர் கார்கள் டொயோட்டா பிராண்டில் இருந்து வெளிவந்தன. ஆனால் விரைவில் மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா கார் ஒன்றை அடிப்படையாக கொண்டு தனது புதிய காரை களமிறக்குகிறது. இந்த டொயோட்டா கார் வேறொன்று கிடையாது, சந்தையில் பிரபலமான இன்னோவா மாடல் ஆகும்.
இன்னோவாவில் சமீபத்தில் புதிய தலைமுறை காராக இன்னோவா ஹைகிராஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. டொயோட்டாவின் ஹைப்ரீட் எம்பிவி காரான இதனை அடிப்படையாக கொண்டே புதிய காரை 'என்கேஜ்' என்ற பெயரில் மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டு வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை போல் புதிய மாருதி சுஸுகி என்கேஜ் காரும் ஹைப்ரீட்டில் இயங்கக்கூடியதாகவே இருக்கும். இந்த நிலையில் 'என்கேஜ்' பெயரை மாருதி சுஸுகி பதிவு செய்து கொண்டதை உறுதிப்படுத்தும் ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆவணத்தின்படி பார்க்கும்போது, என்கேஜ் பெயருக்கான காப்புரிமையை கேட்டு கடந்த மார்ச் 21ஆம் தேதி மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயருக்கான காப்புரிமை இன்னும் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என்றாலும், அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கமான சரிப்பார்ப்பு பணிகள் தான் நடைபெற்று வருவதாகவும், விரைவில் என்கேஜ் பெயரை ஆட்டோமொபைல் வாகனங்களில் பயன்படுத்தி கொள்ள மாருதி சுஸுகிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பெயருக்கான காப்புரிமை கிடைத்தவுடன், காரின் டீசர்களை வெளியிட மாருதி சுஸுகி துவங்கிவிடும். இருப்பதிலேயே விலைமிக்க மாருதி சுஸுகி காராக என்கேஜ் கார் வருகிற ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பிராண்டின் விலைமிக்க காராக கொண்டுவரப்பட்டாலும், இன்னோவா ஹைகிராஸை காட்டிலும் குறைந்த விலையில் என்கேஜை வழங்க மாருதி சுஸுகி நிறுவனம் முயற்சிக்கும் என்பது உறுதி.

குறிப்பாக, என்கேஜ் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை இன்னோவா ஹைகிராஸை காட்டிலும் குறைவாக ரூ.18 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்படும். அதிகப்பட்சமாக என்கேஜ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னோவா ஹைகிராஸ் பிரீமியம் எம்பிவி காரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர், 4-சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் தான் தேர்வுகளாக மாருதி என்கேஜில் வழங்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் என்கேஜ் காரின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. ஏனெனில் இந்த கார் மாருதி சுஸுகி பிராண்ட் மீதான மக்களின் பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சத்தில் மாருதி சுஸுகி கார் என்பது முற்றிலும் புதுமையான விஷயமாகும். இன்னோவா ஹைகிராஸ் அளவிற்கு மாருதி என்கேஜால் சாதிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
