காரை வாங்கும் ஆசையே போய்டும்!! இந்த மாருதி காரை இன்று புக் செய்தாலும் 20 மாதங்கள் கழித்துதான் டெலிவிரி!
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரை முன்பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு சுமார் 90 வாரங்கள் வரையில் அதிகரித்து உள்ளது. இதுகுறித்தும், எர்டிகா கார் பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
எம்பிவி எனப்படும் நீளமான மற்றும் அகலமான கார்களுள் அதிகம் விற்பனையாகும் காராக கடந்த பல வருடங்களாக மாருதி சுஸுகியின் எர்டிகா விளங்கி வருகிறது. அதாவது, இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி கார் எர்டிகா ஆகும். கடைசியாக, மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட எர்டிகா காரை கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது.

LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என்ற 4 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா காரை மொத்தம் 7 விதமான பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம். இந்த நிலையில், எர்டிகா காரை முன்பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி பார்க்கும்போது, தலைநகர் டெல்லியில் எர்டிகா காரை புக் செய்பவர்கள் 40 வாரங்களில் இருந்து 90 வாரங்கள் வரையில், அதாவது 9 மாதங்களில் இருந்து சுமார் 20 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
எர்டிகா தற்சமயம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் பெட்ரோல் வேரியண்ட்களில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 137 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜினை பெட்ரோல் வேரியண்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் பெறலாம்.

மறுப்பக்கம், சிஎன்ஜி வேரியண்ட்களிலும் மேற்கூறப்பட்ட அதே பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்களில் இந்த பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 87 பிஎச்பி மற்றும் 121.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையே பெற முடியும். அதேபோல், எர்டிகா சிஎன்ஜி காரை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும்.
மாருதி சுஸுகி எர்டிகா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.64 லட்சத்தில் இருந்து ரூ.13.08 லட்சம் வரையில் உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி கார் எர்டிகா ஆகும். எர்டிகாவின் வெற்றிக்கு டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் இன்னோவாவின் பேபி வெர்சனாகவும், அதிக விலையினால் இன்னோவாவை வாங்க முடியாதவர்களுக்காகவும் எர்டிகா கொண்டுவரப்பட்டது. எதிர்பார்த்ததை போல் இன்னோவா பிரியர்கள் அனைவரும் எர்டிகாவின் பக்கம் சாய்ந்தனர்.

எர்டிகாவின் வெற்றியை கண்ட டொயோட்டா நிறுவனம் எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்சனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் முனைப்பில் கடந்த சில வருடங்களாக உள்ளது. இந்த நிலையில், எர்டிகாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா ரூமியன் எம்பிவி கார் மேட்-இன்-இந்தியா தயாரிப்பாக தென்னாப்பிரிக்கா நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே பல்வேறு சுஸுகி கார்கள் டொயோட்டா ரீபேட்ஜ்டு வெர்சன்களாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. உதாரணத்திற்கு, டொயோட்டா ஸ்டார்லெட் (பலேனோ ரீபேட்ஜ்டு மாடல்).
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த கால அளவானது எர்டிகா காரின் வேரியண்ட்கள், நிறத்தேர்வுகள், புக் செய்யும் டீலர்ஷிப் மையங்கள் உள்பட பிற காரணிகளை சார்ந்தது ஆகும். அதாவது, எர்டிகாவின் குறிப்பிட்ட வேரியண்ட்டை, குறிப்பிட்ட நிறத்தில் தேர்வு செய்வோர் 40 வாரங்களிலேயே காரை டெலிவிரி பெற்றுவிடலாம். எர்டிகா காரின் வெயிட்டிங் பிரீயட் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.


Click it and Unblock the Notifications
