சிங்கிள் சார்ஜில் 550 கிமீ! இவ்ளோ கம்மியான விலையில் மாருதி எலெக்ட்ரிக் காரா! டாடா தலையில துண்ட போட போகுது!
இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) இன்று (ஜனவரி 11) தொடங்கியது. இதில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) என்ற கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம், இந்த இவிஎக்ஸ் கான்செப்ட் மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக வரும் 2025ம் ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டாவுடன் கூட்டணி!
மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா (Toyota) நிறுவனமும் இணைந்து, இந்த எலெக்ட்ரிக் காரை தயாரிக்கின்றன. எனவே டொயோட்டா நிறுவனமும் இந்த எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கும். ஆனால் 2 நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்யும். சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களுக்கும் இடையே ஏற்கனவே கூட்டணி இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
குஜராத்தில் உற்பத்தி!
குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் ஆலையில் இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இங்கிருந்தே டொயோட்டா நிறுவனத்திற்கும் இந்த எலெக்ட்ரிக் கார் சப்ளை செய்யப்படலாம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4,300 மிமீ, 1,800 மிமீ மற்றும் 1,600 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் வீல் பேஸ் நீளம் 2,700 மிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உட்புறத்தில் பயணிகளுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும்.

டிசைன்!
இந்த எலெக்ட்ரிக் காரின் முன் பகுதியில் எல்இடி பகல் நேர விளக்குகளுடன் நேர்த்தியான 'V' வடிவ ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கம்பீரமான வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், கூபே கார்களை போன்ற ரூஃப் லைன் ஆகியவையும் இந்த எலெக்ட்ரிக் காரின் டிசைனில் கவனம் ஈர்க்க கூடிய அம்சங்களாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரின் டிசைன், சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும்போது, ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், 60 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 550 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த எலெக்ட்ரிக் காரில் தொலை தூர பயணங்களையும் கூட எளிமையாக மேற்கொள்ள முடியும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில், எல்எஃப்பி (LFP - Lithium Iron Phosphate) பிளேடு செல் பேட்டரிகளை பயன்படுத்தியுள்ளது. பிளேடு செல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதால், விலையை குறைக்க முடியும் என்பதுடன், அதிக ரேஞ்ச் (Range) கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்க கூடிய கிலோ மீட்டர்கள்தான் ரேஞ்ச் எனப்படுகிறது.

ஹூண்டாய், டாடாவிற்கு செக்!
இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காருடன் (Hyundai Creta EV), மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரும், வரும் 2025ம் ஆண்டுதான் விற்பனைக்கு வரவுள்ளது. இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் காருக்கும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா எலெக்ட்ரிக் காரை தூக்கி சாப்பிட போகுது!
இதில், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டுதான் விற்பனைக்கு வரவுள்ளது என்பதால், அதைப்பற்றிய விபரங்கள் தெரியவில்லை. ஆனால் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 40.5 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 437 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பேட்டரி, ரேஞ்ச் ஆகிய அம்சங்களில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரை விட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் சிறப்பான ஒன்றாக இருக்கலாம்.
விலை இவ்ளோ கம்மியா!
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.34 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.04 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 13 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலைக்கு வந்தால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இதன் ரேஞ்ச் மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது. அத்துடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தனைக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை, 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் கார் மூலம் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








