இன்னோவா சோலியை முடிக்க போகும் விலை குறைவான டொயோட்டா கார்! தரமட்டத்திற்கு இறங்கி அடிக்க ரெடி ஆயிட்டாங்க!
டொயோட்டா (Toyota) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய 2 முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில், பெயரை மாற்றி விற்பனை செய்து கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரானது, டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவது இதற்கு ஒரு உதாரணம். இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இன்னும் பல்வேறு கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2 முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்ற புதிய காரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த கார் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. அனேகமாக இன்னும் ஒரு மாத காலத்திற்குள், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் இந்த காரை தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது ஜூன் மாதத்திற்கு பிறகு, டொயோட்டா நிறுவனம் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்களும் அப்படியே டொயோட்டா வெர்ஷனிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரையும், டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
தென் ஆப்ரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே மாருதி சுஸுகி எர்டிகா காரை, டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்ற பெயரில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும் இந்த காரை டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெயரை மட்டும் மாற்றி டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற புதிய மாடல், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த காரின் டிசைன் அம்சங்கள், டொயோட்டா ரூமியான் காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ரூமியான் என்ற பெயரிலேயே இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதே நேரத்தில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இந்த காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதே எம்பிவி ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை காட்டிலும், பல லட்ச ரூபாய் குறைவான விலையில் (Price), டொயோட்டா ரூமியான் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே அதிக விலை என்பதால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்க முடியாதவர்களுக்கு, டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட சிறப்பான மைலேஜையும் (Mileage), டொயோட்டா ரூமியான் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா ரூமியான் எம்பிவி கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு 2023ம் ஆண்டிற்குள் டொயோட்டா ரூமியான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








