இந்திய தயாரிப்பு கார்களை நம்பி வாங்கும் வெளிநாடுகள்!! மாருதி சுஸுகிக்குதான் இதுக்கு நன்றி சொல்லணும்...
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் சமீப காலமாக புதியது புதியதாக பல்வேறு கார்களை சந்தைக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதுதான் ஃப்ரான்க்ஸ் ஆகும். பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிராஸ்ஓவர் காராக விளங்கும் ஃப்ரான்க்ஸ் காருக்கான முன்பதிவுகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரான்க்ஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, 556 ஃப்ரான்க்ஸ் கார்கள் மும்பை முந்த்ரா மற்றும் குஜராத் பிபாவாவ் துறைமுகங்களில் இருந்து லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஃப்ரான்க்ஸ் கார்களின் வெளிநாட்டு ஏற்றுமதி குறித்து பேசிய மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & சிஇஓ ஹிராஷி டாகேயுசி, "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்ரான்க்ஸ் எங்கள் கார்கள் வரிசையில் ஓர் முக்கியமான மாடலாகும். மேலும் இது எங்கள் லட்சிய ஏற்றுமதி திட்டங்களை பெருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேக் இன் இந்தியாவை நோக்கிய இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்கள் தாய் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷனின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கார்கள் வரிசையை விரிவுப்படுத்தி உள்ளோம். இப்போது அதிக வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
இந்திய ஃப்ரான்க்ஸ் கார் வாடிக்கையாளர்கள் தங்களின் மிகவும் விருப்பப்படும் வாகனம் உலகளவில் வாடிக்கையாளர்களின் தேர்வாக மாறும் என்பதை நன்றாக உணர முடியும்" என்றார். 'கிராஃப்ட் ஃப்யுச்சரிசம்' என்ற டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட மாருதி சுஸுகி பலேனோ கார் முதன்முதலாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களின் காட்சிக்கு நிறுத்தப்பட்டது.

மேலும், அப்போதே புதிய ஃப்ரான்க்ஸ் காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டன. எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் மாருதி சுஸுகிக்கு ஓர் முக்கியத்துவமான மாடலாக ஃப்ரான்க்ஸ் விளங்குகிறது. சந்தையில் பிரபலமான பிரெஸ்ஸா காரின் விலைமிக்க பிரீமியம் தரத்திலான காராக விளங்கும் ஃப்ரான்க்ஸ் இந்தியாவில் நெக்ஸா டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன் விற்பனையில் இருந்த பலேனோ ஆர்.எஸ் காரில் வழங்கப்பட்ட 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் என்ஜின் மீண்டும் ஃப்ரான்க்ஸ் கார் மூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த டர்போ என்ஜின் மட்டுமின்றி, 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்விலும் ஃப்ரான்க்ஸ் காரை பெறலாம். இதில் டர்போ என்ஜினை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் பெறலாம்.

அதேபோல், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெறலாம். ஃப்ரான்க்ஸ் காரின் வேரியண்ட்களின் எண்ணிக்கை 5 ஆகும். இந்த எஸ்யூவி காரில் ஹெட்-அப் டிஸ்பிளே, 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 4 ஸ்பீக்கர்கல் பிளஸ் 2 ட்விட்டர் செட் அப், சுஸுகி கனெக்ட் டெலிமேட்டிக்ஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் முன்பக்க ஃபுட்வெல் இல்லுமினேஷன் போன்றவையும் இடம்பெறுகின்றன. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், ஃப்ரான்க்ஸ் காரில் 360-டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், 4 ஏர்பேக்குகள் முதலியவை கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்திய தயாரிப்பு வாகனங்கள் தற்போதைய காலத்தில் பல்வேறு நாடுகளில் கால்பதித்து வருகின்றன. இதன் மூலமாக இந்திய தயாரிப்புகளின் தரத்தின் மீது வெளிநாட்டினருக்கும் ஓர் நம்பிக்கை ஏற்படும். இதற்கு நாம் மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற முன்னணி கார் நிறுவனங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications
