பாதசாரிகள் மீது வாகனம் மோதுவதை தவிர்க்க சூப்பரான அம்சம் சேர்ப்பு! டாடாகூட இத கொடுக்கல.. மாருதி வேற லெவல்!
மாருதி சுஸுகி நிறுவனம் அவாஸ் (AVAS tech) எனும் புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய லேட்டஸ்ட் கார் மாடல் ஒன்றில் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன? இதனால் என்ன மாதிரியான பலன் கிடைக்க இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் சூப்பராக விற்பனையாகிக் கொண்டிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி-க்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் கார் மாடலையே பாதசாரிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் வாகனமாக மாருதி சுஸுகி மாற்றி இருக்கின்றது.

அவாஸ் (AVAS tech) என்கிற புதிய தொழில்நுட்பத்தையே இந்த காரில் மாருதி சுஸுகி சேர்த்து இருக்கின்றது. இது ஓர் பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகும். இதுவே, பாதசாரிகளுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய தொழில்நுட்பம் ஆகும். ஒலி வாகன எச்சரிக்கை அமைப்பு (Acoustic Vehicle Alerting System) என்பதே இந்த அம்சத்தின் முழு பெயராகும்.
இது சாலையில் வாகனம் பயணித்துக் கொண்டிருக்கும்போது பதாசாரிகள் குறுக்கிட நேரிட்டால் அதுகுறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே நமக்கு வழங்கும். இதனால் வாகனம் மோதலில் ஈடுபடுவதற்கு முன்னரே அதை தவிர்த்துவிட முடியும். இத்தகைய சூப்பரான பாதுகாப்பு அம்சத்தையை மாருதி சுஸுகி தற்போது புதிதாக கிராண்ட் விட்டாராவில் சேர்த்திருக்கின்றது.

இந்த காரை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் விதமாக இந்த அம்சத்தை மாருதி சுஸுகி சேர்த்து உள்ளது. இதனால் காரின் விலை சற்று அதிகரித்து இருக்கின்றது. ரூ. 4 ஆயிரம் வரையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை அதிகரித்து இருக்கின்றது. அதேவேளையில், மாருதி சுஸுகி இந்த அம்சத்தை கிராண்ட் விட்டாராவின் உயர் நிலை தேர்வுகளான ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியண்டுகளில் மட்டுமே வழங்கி இருக்கின்றது.
ஆரம்ப நிலை தேர்வுகளில் இந்த அம்சத்தை பெற முடியாது. இந்த அம்சத்தை ஏற்கனவே கிராண்ட் விட்டாராவின் இன்டலிஜென்ட் ஹைபிரிட் வேரியண்டுகளை பயன்படுத்தி வரும் நபர்களாலும் ரெட்ரோ-ஃபிட் செய்துக் கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. இதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில அம்சங்கள் கூடுதல் கட்டணத்தின் வாயிலாக டீலர்கள் வாயிலாகவே பொருத்திக் கொள்ளும் வசதியை நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

அந்தவகையில், இந்த அவாஸ் அம்சத்தையும் முந்தைய வாடிக்கையாளர்கள் பொருத்திக் கொள்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ப்யூர் ஹைபிரிட், அதாவது, எலெக்ட்ரிக் மோட்டார் வாயிலாக இயங்கும்போது மிகவும் அமைதியான நிலையில் இயங்கும். அது இயக்கத்தில் இருக்கும்போதுகூட பெரிய அளவில் சத்தம் இருக்காது.
கரகரவென இயங்கிக் கொண்டே இருக்கும் எஞ்ஜின் சத்தத்தில் கார்களை ஓட்டியவர்களுக்கு இந்த அமைதி சற்றே கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனவேதான் மாருதி சுஸுகி இந்த அவாஸ் தொழில்நுட்பம் வாயிலாக 'பீப் பீப்' எச்சரிக்கை அமைப்பையும் அறிமுகம் செய்திருக்கின்றது. இது வாகனம் இயங்கத் தொடங்கும்போது கேபின் உள்ளேயும், வெளியேயும் எச்சரிக்கை ஒலியை வழங்கும்.

உதாரணமாக ரயில்கள் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் முன் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். இதுபோலவே இந்த அம்சமும் டீசன்டான அளவில் ஒலியை வெளிப்படுத்தி டிரைவர் மற்றும் பாதசாரிகளை எச்சரிக்கும். இந்தியாவிலேயே இத்தகைய அம்சம் கிராண்ட் விட்டாராவிலேயே முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஏஐஎஸ் 173ன் கூற்றுப்படி, அமைதியான நிலையில் இயங்கும் வாகனங்கள் கட்டாயம் புறப்படும்போது குறிப்பிட்ட வகையிலான எச்சரிக்கை ஒலியை வெளிப்படுத்த வேண்டும் என கூறுகின்றது. இந்த புதிய விதியையே மாருதி சுஸுகி தன்னுடைய கிராண்ட் விட்டாராவில் பூர்த்தி செய்திருக்கின்றது. இந்த அம்சத்தை தன்னுடைய பிற ஹைபிரிட் வாகனங்களிலும் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்த விதி கிராண்ட் விட்டாராவிற்கு மட்டுமே பொருந்தும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதைப் போலவே ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் ஃப்யூவல் செல் கார்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களில் பாதுகாப்பு தரம் மெல்ல மெல்ல உயர்த்தப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சமீப காலமாக விபத்தால் இறப்போரின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விபத்துகளையும், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கும் முயற்சியில் வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









