7 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் தருமா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
இந்திய சந்தையில் 5 சீட்டர் கார்களின் 7 சீட்டர் வெர்ஷன்களை (7 Seater Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்வது ஒரு 'டிரெண்ட்' ஆக மாறி விட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு 5 சீட்டர் கார்களின் 7 சீட்டர் வெர்ஷன்களை களமிறக்கி வருகின்றன.
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி நிறுவனம் தனது 5 சீட்டர் கார் ஒன்றின் புதிய 7 சீட்டர் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா. சிறப்பான மைலேஜ், அருமையான வசதிகள் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட, 5 சீட்டர் மாடலில் மட்டுமே இந்த கார் கிடைத்து வருகிறது. எனவே இதன் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா எக்ஸ்எல் (Maruti Suzuki Grand Vitara XL) என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 சீட்டர் ஆப்ஷனுடன் மட்டுமல்லாது, இந்த புதிய மாடலில் 6 சீட்டர் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் தற்போது உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதன்படி 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை பொறுத்தவரை தற்போது உள்ள மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மாடலின் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 25 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் பல்வேறு கார்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா எக்ஸ்எல் 'செக்' வைக்கவுள்ளது.
இதில், டாடா சஃபாரி (Tata Safari), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) போன்ற கார்கள் மிகவும் முக்கியமானவை. இந்த கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா எக்ஸ்எல் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சிறப்பான மைலேஜ் வழங்குவதுடன், அதிக வசதிகளை கொண்டதாகவும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா எக்ஸ்எல் இருக்கலாம். 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளை இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








