100 நாடுகளில் நின்னு பேசும் மாருதி கார்கள்! கப்பல் கப்பலா அனுப்பறாங்க! இந்தியாவிற்கு இவ்ளோ பெரிய கௌரவமா!
பெரிய அண்ணன்!
இந்திய சந்தையில் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) திகழ்ந்து வருகிறது. ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா (Tata) போன்ற கார் நிறுவனங்கள் எல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பின்னால்தான் இருக்கின்றன. போட்டியாளர்கள் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு மாருதி சுஸுகி கார்களை விற்று தள்ளுகிறது.
நம்பர்-1 நிறுவனமாக இருந்தாலும், மாருதி கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனினும் ஓரளவிற்கு குறைவான விலையில் கார்கள் கிடைப்பதும், அவை மைலேஜை வாரி வழங்குவதும், மாருதி சுஸுகி நிறுவனத்தை நம்பர்-1 இடத்தில் நீடித்து நிலைக்க வைத்துள்ளன. இந்தியாவின் சிறு நகரங்களில் கூட மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இயங்கி வருகின்றன என்பது அவர்களின் கூடுதல் பலம்.

இத்தனை நாடுகளா!
மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் கார்களை விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் இன்று தொடங்கவில்லை. கடந்த 1986-87ம் நிதியாண்டில் இருந்தே, மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அப்போது முதல் முறையாக ஹங்கேரி நாட்டிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தனது தயாரிப்பை அனுப்பியது.
ஆனால் தற்போது சுமார் 100 நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து கொண்டுள்ளது. ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை அனுப்பி வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இத்தனை நாடுகளின் சாலைகளில் ஓடி கொண்டிருப்பது என்பது உண்மையிலேயே இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்!

போட்டியாளர்களுக்கு தலை சுற்றலை ஏற்படுத்தும் நம்பர்!
இந்த சூழலில், கடந்த 2022ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் பிரம்மிக்க வைக்கும் எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி-டிசம்பர் காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 2,63,068 ஆகும். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 2,05,450 ஆகும். இதன் மூலம் தொடர்ந்து 2 ஆண்டுகளாக 2 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்திருப்பதுடன், 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022ம் ஆண்டு, ஏற்றுமதியில் 28 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்து அசத்தியுள்ளது மாருதி சுஸுகி! இந்த எண்கள், போட்டி நிறுவனங்களுக்கு தலை சுற்றலையே ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
தடைகளை தகர்த்து சாதனை!
ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த சாதனையை அவ்வளவு எளிதாக ஒன்றும் செய்து விடவில்லை. கார் உற்பத்திக்கு தேவையான மிகவும் முக்கியமான ஒரு சில பாகங்களுக்கு தற்போது மிகவும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே கார் உற்பத்தியுடன், விற்பனையும் குறைந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு பெரிய பிரச்னையையும் சமாளித்து கொண்டேதான், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் தொடர்ந்து சாதனைகளை படைத்து கொண்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி நிறுவன கார்களின் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே வருகிறது என்பது, வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை எடுத்து காட்டுகிறது. விலை சற்று அதிகரித்தாலும் பரவாயில்லை என மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியில் இன்னும் பல புதிய உச்சங்களை தொட முடியும்.


Click it and Unblock the Notifications