டொயோட்டா இன்னோவாவை மென்னு விழுங்க வரும் மாருதியின் புதிய கார்.. ஆஹா இப்படி ஒரு பேருலதான் அந்த கார் வர போகுதா!
இந்தியர்களின் மிகவும் பிரியமான எம்பிவி ரக காராக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) மாறி உள்ளது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கியது.
இந்த மாதிரியான சூழலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்ட கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அரசல்-புரசலாக வெளியாகிக் கொண்டிருந்த இந்த தகவலை மாருதி சுஸுகி நிறுவனம் அண்மையில் இது உண்மைதான் என உறுதிப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, புதிய எம்பிவி கார் 'என்கேஜ்' (Engage) என்கிற பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த பெயரில் வராது புதிய பெயரிலேயே இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையிலான காரை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வரும் என இப்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை ஆட்டோகார் இந்தியா தளமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. அது மாருதியின் புதிய எம்பிவி கார் 'இன்விக்டோ' (Invicto) என்கிற பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தன்னுடைய செய்தியில் தெரிவித்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இன்விக்டோ காரின் படமும் இணையம் வாயிலாக தற்போது கசிந்திருக்கின்றது.

இந்த படத்தை ஓவர்டிரைவ் எனும் தளம் வெளியிட்டு இருக்கின்றது. இதுமாதிரியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் தற்போது எப்போது இந்த கார் விற்பனைக்கு வரும் மற்றும் புக்கிங் தொடங்கப்பட இருக்கின்ற என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது. மாருதி சுஸுகி தன்னுடைய புதிய எம்பிவி காருக்கு வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி அன்றில் இருந்து புக்கிங்கை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் அறிமுகம் வரும் ஜூலை 5ஆம் தேதி அரங்கேற இருக்கின்றது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூ. 20 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுக்க முழுக்க டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை தழுவி உருவாக்கப்படுவதால் இந்த கார் அதன் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.
அதிக இட வசதி, சூப்பரான மைலேஜ் திறன் என பல விஷயங்களில் இன்னோவா ஹைகிராஸை இந்த கார் ஒத்துப்போகும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் மாருதி சுஸுகி இன்னோவா ஹைகிராஸை வெறும் ரீ-பேட்ஜ் மட்டுமே செய்ய இருக்கின்றது. இத்துடன், ஒரு சில புதிய அம்சங்களையும் அது சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், மாருதி சுஸுகி லோகோக் கொண்ட அலாய் வீல், பனோரமிக் சன்ரூஃப், 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு அம்சம் இதில் இடம் பெற்றிருக்கும்) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (advanced driver assistance system) என எக்கசக்க அம்சங்கள் மாருதி சுஸுகியின் புதிய இன்விக்டா காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
எஞ்ஜினைப் பொருத்த வரை மாருதி சுஸுகி இன்விக்டா காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்ஜினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 173 எச்பி மற்றும் 183 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கின்றது.
டொயோட்டா நிறுவனம் அதன் இன்னோவா ஹைகிராஸ் காரை ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஹைபிரிட் அம்சத்துடன் சேர்த்து இ-சிவிடி அல்லது சிவிடி தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகியின் இந்த கார் இருப்பதிலேயே விலையுயர்ந்த மாருதி தயாரிப்பாக விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா-மாருதி சுஸுகி இரு நிறுவனங்களும் இணைந்ததன் பின்னர் மாருதியின் தயாரிப்புகள் சிலவற்றை டொயோட்டா ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேய, டொயோட்டாவின் புகழ்பெற்ற தயாரிப்பான இன்னோவா ஹைகிராஸை முதல் முறையாக ரீபேட்ஜ் செய்து மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
இதன் வருகை கட்டாயம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இன்னோவா ஹைகிராஸ் காரை அது இருந்த இடம் தெரியாமல்கூட போக செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இன்னோவா ஹைகிராஸைக் காட்டிலும் சற்று குறைவான விலையிலேயே இன்விக்டா எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








