உல்லாச கப்பலையே தூக்கி சாப்பிடும் மாருதி கார்! தளபதி பிறந்தநாளை எல்லாம் இந்த விஷயம் ஓரம் கட்டிருச்சு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி இன்விக்டோ, வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் (Launch) செய்யப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக இன்விக்டோ காரின் புதிய டீசர் (Teaser) ஒன்றை, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் (Video), மாருதி சுஸுகி இன்விக்டோ பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இதன்படி மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் முன் பக்க க்ரில் அமைப்பின் மீது கிடைமட்டமான க்ரோம் பார் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 18 இன்ச் அலாய் வீல்களுக்கு புதிய டிசைனும் வழங்கப்படலாம். மேலும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, வித்தியாசமான டெயில்லேம்ப்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பம்பர்களும் சற்றே மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வீடியோவில் டெயில்லேம்ப் மற்றும் அலாய் வீல் ஆகியவற்றின் டிசைன் தெளிவாக காட்டப்படவில்லை என்பதால், அவற்றை உறுதியாக கூற முடியவில்லை.
ஒட்டுமொத்தத்தில் டிசைன் (Design) என்ற விஷயத்தை பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ சற்றே வேறுபட்டிருக்கும். செயல்திறனை பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போல் அல்லாமல், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் ஹைப்ரிட் இன்ஜின் (Hybrid Engine) ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். இதனுடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் இந்த ஹைப்ரிட்-பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கலாம்.
வசதிகளை (Features) பொறுத்தவரை, அடாஸ் (ADAS), பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு அம்சங்களை, மாருதி சுஸுகி இன்விக்டோ பெற்றிருக்கலாம். இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களுக்கு, மாருதி சுஸுகி இன்விக்டோ போட்டியாக இருக்கும்.
அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடனும் இது போட்டியிடும். மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை (Price) எவ்வளவு? மற்றும் என்னென்ன வசதிகள்? என்பது உள்பட நமது அனைத்து கேள்விகளுக்கும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தினமான ஜூலை 5ம் தேதி பதில் கிடைத்து விடும். இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகே பிடதி பகுதியில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், மாருதி சுஸுகி இன்விக்டோ உற்பத்தி செய்யப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குவதால், இன்னோவா ஹைக்ராஸ் காரை காட்டிலும், இன்விக்டோ காரின் விலை சுமார் 15 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாருதி சுஸுகி இன்விக்டோ பிரீமியம் எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதிநவீன வசதிகளுடன், சொகுசான பயணம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி இன்விக்டோ மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் இந்த காரை வாங்க விரும்பினால், தற்போதே முன்பதிவு (Booking) செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications







