ஒத்த கால்ல நின்னாலும் உடனே கிடைக்காது! ஜிம்னி காரை வாங்க எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க தெரியுமா?
மாருதி சுஸூகி ஜிம்னி கார் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியான நிலையில் தற்போது ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது 5 டோர் லைஃப்ஸ்டைல் எஸ்யூவி காராக மாருதி சுஸூகி ஜிம்னி காரை காரை பொது பார்வைக்காகக் காட்சிப்படுத்தியது. இந்த காரை இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான புக்கிங்கையும் துவங்கியது.

சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வரும் புக்கிங்கில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் சுமார் 25 ஆயிரம் பேர் இந்த காரை புக்கிங் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்காகப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்ல இந்த காரை புக் செய்த 25 ஆயிரம் பேரும் இந்த காரின் விலை என்ன என்று தெரியாமலேயே புக் செய்துள்ளனர். இந்த காரின் அறிமுகத்தின் போது தான் இதன் விலை விபரம் வெளியாகும்.
இந்நிலையில் இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்த மாத இறுதியில் இருக்கும் எனப் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி இந்த அறிமுகம் ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாருதி நிறுவனம் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாவிட்டாலும் நமக்குக் கிடைத்த நம்பத் தகுந்த வட்டாரங்களில் இப்படியான தகவல் பேசப்பட்டு வருகிறது.

மாருதி நிறுவனம் இந்த ஜிம்னி காரை ஆண்டிற்கு ஒரு லட்சம் காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அப்படி என்றால் மாதம் சுமார் 8300 கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதில் 7 ஆயிரம் கார்களை இந்திய மார்கெட்டிற்கும், மீதம் உள்ள 1300 கார்களை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. நமக்குக் கிடைத்த தகவலின் படி டாப் ஸ்பெக் மாடலுக்கு தான் அதிகமான டிமாண்ட் இருப்பதாகவும், அதே நேரம் ப்ளூயிஷ் பிளாக், கைனடிக் யெல்லோ மற்றும் பியர்ல் ஆர்க்டிக் ஒயிட் ஆகிய நிறங்களுக்குத் தான் புக்கிங் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிமுகமே ஆகாத இந்த ஜம்னி காருக்கு தற்போது புக்கிங் குவிந்துவிட்டதால் காத்திருப்பு காலம் வேறு இருக்கிறதாம். தற்போது இந்த காரை புக்கிங் செய்தால் மேனுவல் வேரியன்டிற்கு அறிமுகமானதிலிருந்து 6 மாதம் வரையிலும், ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்கு அறிமுகமானதிலிருந்து 8 மாதம் வரையிலும் காத்திருப்பு காலம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. நம்பத் தகுந்த வட்டாரங்களில் பேசப்படும் தகவல்கள் தான்.

இந்த மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு கே15பி பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 எச்பி பவரையும் 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் அம்சங்களுடன் கூடிய இன்ஜன். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லேடர் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இதில் வீல் டிரைவ் ஹை, 4 வில் டிரைவ் ஹை, 4 வீல் டிரைவ் லோ ஆகிய டிரைவ் மோட்கள் உள்ளன.
இந்த மாருதி சுஸூகி ஜிம்னி காரை பொருத்தவரை ஸெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய 2 வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இதில் ஆட்டோ எல்இடி ஹெட்லைட், 9 இன்ச் டச்ஸ்கிரீன், ஸ்மார்ட் ப்ளே ப்ரோ + இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆர்க்கேம்ஸ் சவுண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குககள், இஎஸ்பி, ஹைல் ஹோண்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ10 -12 லட்சத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மார்கெட்டில் இந்த காருக்கு நேரடி போட்டியாக எந்த காரும் தற்போது வரை இல்லை. ஆனால் இதன் ஆஃப்ரோடு அம்சங்களை மட்டும் பார்த்தால் மஹிந்திரா தார், ஃபோர்ஸ் கூர்கா ஆகிய கார்கள் போட்டி கார்களாக மார்கெட்டில் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸூகி ஜிம்னி காருக்கு அறிமுகத்திற்கு முன்பே இவ்வளவு டிமாண்ட் இருப்பது மக்கள் மத்தியில் அந்த காருக்கு உள்ள மவுசை காட்டுகிறது அறிமுகத்திற்கு முன்பே இந்த கார் மார்கெட்டில் வெற்றி பெற்ற கார் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. இந்த காரின் தரிசனத்திற்காகத் தான் இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
