இந்த வீடியோவை பாத்ததுக்கு அப்புறம் மாருதி மேல மரியாதை அதிகமாயிருச்சு! இவ்ளோ நாளா ரொம்ப தப்பா நெனச்சுட்டோமே!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை (Price) 12.74 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.05 லட்ச ரூபாயாக உள்ளது.
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்திலேயே மாருதி சுஸுகி ஜிம்னி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து விட்டது. இந்த காரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. மாருதி சுஸுகி ஜிம்னி காரின் செயல்திறனை விளக்கும் வீடியோ (Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி காரை ஸ்பீடு டெஸ்ட்டிற்கு (Speed Test) உட்படுத்தி, அதன் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வைத்து, மாருதி சுஸுகி ஜிம்னி கார், ஸ்பீடு டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தோன்றும் நபர், முதல் கியரிலேயே மாருதி சுஸுகி ஜிம்னி கார் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விட்டதாக கூறுகிறார். இதன்பின் மணிக்கு 90 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த கார், 2வது கியரில் கடந்துள்ளது.

அதைதொடர்ந்து மணிக்கு 120 கிலோ மீட்டர் என்ற வேகம், 3வது கியரில் எட்டப்பட்டுள்ளது. இதன்பின் 4வது கியரில், மணிக்கு 140 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் கார் ஓட்டப்பட்டது. இறுதியாக 5வது கியரில், மணிக்கு 155 கிலோ மீட்டர் என்ற வேகம் எட்டப்பட்டது. இதன்பின் மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய அந்த நபர், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நிறை, குறைகளை அலசுகிறார்.
அவரது கூற்றுப்படி, மாருதி சுஸுகி ஜிம்னி கார் வேகமாக செல்லும்போது கேபினில் சத்தம் அதிகமாக கேட்கிறது. இருப்பினும் கார் நிலையாக இருக்கிறது என்பது அவரது கருத்து. அத்துடன் மாருதி சுஸுகி ஜிம்னி கார் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, பாடி ரோல் பெரிய அளவில் இல்லை என வீடியோவில் தோன்றும் நபர் கூறுகிறார்.
இவற்றை மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நிறைகளாக பார்க்கலாம். இதுபோன்ற காரணங்களால், மாருதி சுஸுகி ஜிம்னி காரை நம்பிக்கையுடன் ஓட்ட முடியும். ஆனால் இத்தகைய அதிவேகங்களில், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நேரடி போட்டி மாடலான மஹிந்திரா தார் (Mahindra Thar) நிலையாக இருக்காது என அந்த நபர் கூறுகிறார்.
அதாவது தள்ளாடுவதை போன்ற உணர்வு ஏற்படும். இது நமது நம்பிக்கையை சீர்குலைத்து விடும். இந்த நபர் மாருதி சுஸுகி ஜிம்னி காரை மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டியிருந்தாலும் கூட, மற்றவர்கள் அவ்வாறு ஓட்ட வேண்டாம் என அறிவுரை வழங்குகிறார். அதற்கு பதிலாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்பது அவரது கருத்து.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அவருடைய கருத்தும்தான் எங்களுடையதும். அதிவேகத்தில் ஓட்டினால் மைலேஜ் (Mileage) குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அது பாதுகாப்பானதும் அல்ல. இந்த வீடியோவில் தோன்றிய நபர் செய்த ஒரு சில விஷயங்களிலேயே எங்களுக்கு உடன்பாடு இல்லை. நெடுஞ்சாலைகளில் மிகவும் அதிக வேகத்தில் பயணிப்பது ஆபத்தானது.
ஒரு சிறு தவறு நடந்தால் கூட, அதற்கு கொடுக்க கூடிய விலை மிகப்பெரியதாக இருக்கும். அத்துடன் மழை பெய்யும் சமயத்தில், இந்த நபர் ஸ்பீடு டெஸ்ட்டை மேற்கொண்டுள்ளார். இதுவும் ஆபத்தான ஒன்றுதான். மழை பெய்யும் சமயங்களில் சாலை வழுக்கும் தன்மை உடன் இருக்கும். அப்போது அதிவேகத்தில் ஓட்டினால் சாலை விபத்துக்கள் நிகழலாம்.


Click it and Unblock the Notifications








