26.6 கிமீ மைலேஜ் தரும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி அறிமுகம்... பொங்கலை இந்த காருடன் கொண்டாட தயாரா!
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 12.85 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா எஸ்-சிஎன்ஜி (Grand Vitara S-CNG) கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை நிறுவனமும் அதன் சார்பில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த காரை தனது நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இது ஓர் பிரீமியம் வசதிகள் நிறைந்த கார் மாடல் ஆகும்.

எனவேதான் பிரீமியம் கார்களுக்கென பிரத்யேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நெக்ஸா ஷோரூம் வாயிலாக இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மாருதி சுஸுகி. கிராண்ட் விட்டாராவின் இரு உயர் நிலை தேர்வுகளில் மட்டுமே சிஎன்ஜி தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும். டெல்டா (Delta) மற்றும் ஜெட்டா (Zeta) ஆகிய இரு வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி கிடைக்கும். ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் தனது 13 கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மைலேஜ் மற்றும் மோட்டார் விபரம்
இந்த சூழலிலேயே புதிதாக, அதாவது, 14 வது சிஎன்ஜி கார் மாடலாக கிராண்ட் விட்டாரா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிற சிஎன்ஜி கார் மாடல்களைக் காட்டிலும் இதன் மைலேஜ் திறன் சற்று அதிகமாக உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கே இந்த எஸ்யூவி ரக கார் 26.6 கிமீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நெக்ஸ்ட் ஜென் கே சீரிஸ் 1.5 லிட்டர், டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோலில் இயங்கும்போது 74 kW பவரை இந்த கார் வெளியேற்றும். இது 100.61 பிஎஸ் பவருக்கு இணையானது. இதேபோல், 136 என்எம் டார்க்கையும் இது பெட்ரோலில் இயங்கும்போது வெளியேற்றும். ஆனால், சிஎன்ஜியில் இயங்கும்போது இதன் மோட்டார் சற்று குறைவான பவரையே வெளியேற்றும். 87.83 பிஎஸ் பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 121.5 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.
விலை விபரம்
கிராண்ட் விட்டாரவின் டெல்டா மற்றும் ஜெட்டா ஆகிய இரு வேரியண்டுகளில் மட்டுமே சிஎன்ஜி தேர்வு கிடைக்கும் என முன்னதாக குறிப்பிட்டிருந்தோம். இரண்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதில், டெல்டா மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விற்கு 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், ஜெட்டா மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விற்கு 14 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காரை இன்டலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் (Intelligent Electric Hybrid), ஸ்மார்ட் ஹைபிரிட் (Smart Hybrid) மற்றும் சுஸுகி ஆர்கிரிப் செல்க்ட் (Suzuki ALLGRIP SELECT) என பன்முக தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே புதிதாக சிஎன்ஜி தேர்வு இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொழில்நுட்ப வசதிகள் எக்கசக்கம்
இந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை வழங்குவதில் மட்டுமே சிறந்த காராக உருவாக்கப்படவில்லை. அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகவும் கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, 40க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியை வழங்கும் நெக்ஸ்ட் ஜென் சுஸுகி கனெக்ட், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டு உள்ளன.
மாதா சந்தா திட்டத்தின் வாயிலாகவும் இந்த காரை பெற முடியும்
இந்த காரை மாருதி சுஸுகி மாத சந்தா திட்டத்தின்கீழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மாத சந்தா திட்டம் ரூ. 30,723 இல் தொடங்குகின்றது. மாருதி சுஸுகியின் இந்த மாத சந்தா திட்டம், உங்களை மிகவும் சுலபமாக கிராண்ட் விட்டாரா காரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவும். அதாவது, வாகன பதிவு, சர்வீஸ் மற்றும் பராமரிப்பு, காப்பீடு போன்ற எந்தவொரு கவலையும் இல்லாமல் காரை வீட்டுக்கு செல்லவே மாருதியின் இந்த சந்தா திட்டம் உதவியாக இருக்கும். மாதாந்திர சந்தாக் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் இந்த தொல்லைகள் அனைத்தும் தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications









