பைக்குகளில் கூட கிடைக்காது... 35கிமீ மைலேஜை வழங்கும் புதிய மாருதி சுஸுகி கார்!! கார் டாக்ஸியில் ஓர் புதிய கார்
மாருதி சுஸுகி டூர் எச்1 (Maruti Suzuki Tour H1) என்ற முற்றிலும் புதிய ஹேட்ச்பேக் கார் கமர்ஷியல் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கவுள்ள இந்த மாருதி சுஸுகி காரை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி கார்கள் பட்ஜெட் விலையில் கிடைப்பவை என்பது மட்டுமின்றி, சிறந்த மைலேஜை வழங்குபவை என்பது ஊரறிந்த விஷயம். இதனாலேயே மாதந்தோறும் லட்சக்கணக்கிலான கார்களை இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்தால் விற்க முடிகிறது. அதேநேரம் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான கார்களும் மற்ற பிராண்ட்களை போல் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றன.

கமர்ஷியல் வாகனங்கள் என்பவை தனி நபர் ஒருவரது சொந்த போக்குவரத்துக்கானவை அல்ல. டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கானவை. பொதுவாக இவை அதிக எண்ணிக்கையில் ஓர் தொகுப்பாக வாங்கப்படும். அதேபோல், இவ்வாறு கமர்ஷியல் வாகனங்கள் பெரும்பாலும் சிஎன்ஜி பவர்டிரெயினை கொண்டவைகளாக, எரிவாயுவில் இயங்கக்கூடியவைகளாக இருக்கின்றன.
இந்த வரிசையில், மாருதி சுஸுகியின் புதிய டூர் எச்1 காரும் சிஎன்ஜி பவர்டிரெயின் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் சிஎன்ஜி பவர்டிரெயின் இல்லாமல், வழக்கமான பெட்ரோல் என்ஜின் உடனும் டூர் எச்1 காரை பெறலாம். வழக்கமான பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4,80,500 ஆகவும், சிஎன்ஜி தேர்வில் ரூ.5,70,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தோற்றத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் கமர்ஷியல் வெர்சன் தான் இந்த புதிய டூர் எச்1 ஆகும். ஆல்டோ மாடல்கள் கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில் 'டூர்' என்ற பெயரில் கடந்த பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டோ கே10 காரில் அடுத்த-தலைமுறை கே-சீரிஸ் 1.0 லிட்டர் ட்யூயல்-ஜெட், ட்யூயல் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டது.
இதே 1.0 லி பெட்ரோல் என்ஜின் தான் புதிய டூர் எச்1 காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 66.6 பிஎஸ் வரையிலான ஆற்றலை டூர் எச்1 காரின் பெட்ரோல் வேரியண்ட்டிலும், 5,300 ஆர்பிஎம்-இல் 56.6 பிஎஸ் வரையிலான ஆற்றலை சிஎன்ஜி வேரியண்ட்டிலும் பெற முடியும். டார்க் திறனை பொறுத்தவரையில், பெட்ரோல் வேரியண்ட்டில் 89 என்எம் @ 3500 ஆர்பிஎம் வரையிலும், சிஎன்ஜி வேரியண்ட்டில் 82.1 என்எம் @ 3,400 ஆர்பிஎம் வரையிலும் கிடைக்கும்.
ஆனால், கமர்ஷியல் வாகனங்களில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவற்றின் மைலேஜை ஆகும். புதிய டூர் எச்1 காரின் பெட்ரோல் வேரியண்ட்டில் 24.60 kmpl வரையிலான மைலேஜையும், சிஎன்ஜி வேரியண்ட்டில் 34.46 kmpkg வரையிலான மைலேஜையும் பெறலாம் என்கிறது மாருதி சுஸுகி நிறுவனம். பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த காரில் இரு ஏர்பேக்குகள், ப்ரீ-டென்ஷ்னர் உடன் முன் இருக்கை சீட்பெல்ட்ஸ் மற்றும் ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கமர்ஷியல் கார்கள் பிரிவில் மாருதி சுஸுகியின் டூர் கார்கள் மிக பிரபலமானவை. அத்தகைய காரை புதிய தோற்றத்தில் தற்போது மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய டூர் எச்1 காரில் சிஎன்ஜி பாகங்கள் தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்கப்படும். காரின் விலையை குறைக்க எந்த அளவிற்கு மாருதி சுஸுகி முயற்சித்துள்ளது என்பதை காரின் முன்பக்க கருப்பு நிற பிளாஸ்டிக் பேனல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








