ஜெராக்ஸ் மிஷின் கூட இவ்வளவு வேகமா வேலை செய்யாது!! மாருதி கார்கள் ஒவ்வொரு மாசமும் இவ்வளவு உற்பத்தி ஆகுதா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. ஒரு காரை உருவாக்க நூற்றுக்கணக்கான சோதனைகள் இருக்கும் நிலையில், இத்தனை இலட்ச கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வாறு உருவாக்கியது என யோசிக்கும்போது சற்று ஆச்சிரியமாக உள்ளது.
இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி கார்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு இலட்சக்கணக்கிலான கார்கள் இந்த பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளதாக சமீபத்தில்தான் கூறியிருந்தோம்.

இந்த நிறுவனத்தின் 6 -7 கார்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் முதல் 10 கார்களுள் இருக்கின்றன. இதில் இருந்து மாருதி சுஸுகி கார்களுக்கு எந்த அளவிற்கு தேவை உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளலாம். கஸ்டமர்ஸிடம் இருந்து இவ்வளவு தேவைகள் வருகின்றன என்றால், அதற்கேற்ப தேவையான கார்கள் உற்பத்தியையும் மாருதி சுஸுகி பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இதனை மாருதி சுஸுகி பூர்த்தி செய்கிறதா என்றால், போதுமான அளவிற்கு செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,76,437 வாகனங்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், கார்கள் மட்டுமின்றி மாருதி சுஸுகியின் கமர்ஷியல் வாகனங்களும் அடங்குகின்றன. இதற்கு முந்தைய செப்டம்பரிலும் கிட்டத்தட்ட 1.75 இலட்ச வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது.

துல்லியமாக பார்த்தால், கடந்த மாதத்தில் சில ஆயிரம் வாகனங்களை கூடுதலாக இந்த நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. மாருதி சுஸுகியின் மினி & காம்பெக்ட் கார்கள் கடந்த அக்டோபரில் 1,04,856 யூனிட்கள் மாருதி சுஸுகியால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களில் ஆல்டோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், பலேனோ, எஸ்-பிரெஸ்ஸோ, டிசைர் மற்றும் செலேரியோ உள்ளிட்டவை உள்ளன.
மாருதி சுஸுகியின் மிட்-சைஸ் செடான் காரான சியாஸ் கடந்த மாதத்தில் 1,334 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சியாஸ் கார்களின் எண்ணிக்கை 600 -700 மட்டுமே. பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்6 உள்ளிட்டவை அடங்குகின்ற யுடிலிட்டி கார்களை கடந்த மாதத்தில் மொத்தமாக 67,040 யூனிட்கள் மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது.

ஆனால், 2023 செப்டம்பரில் 69,593 யுடிலிட்டி கார்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது. ஒட்டு மொத்தமாக கார்கள் மட்டும் 1,73,451 யூனிட்கள் மாருதி சுஸுகியால் கடந்த மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்வதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஏப்ரல் முதல் துவங்கும் அடுத்த 2024-25ஆம் நிதியாண்டில் சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை டெலிவிரி செய்வதற்கான ஆர்டர்களை இப்போதே மாருதி சுஸுகி பெற்றுள்ளது இதில் முக்கால்வாசி விலை குறைவான கார்களுக்கான ஆர்டர்கள் என கூறப்படுவதால், மாருதி சுஸுகியின் விலை குறைவான கார்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









