மாருதி சுஸுகி செய்ய போகும் நல்ல காரியம்! ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை குடுக்க போறாங்க! ரொம்ப சந்தோஷம்யா!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹரியானா மாநிலம் மனேசர் மற்றும் குர்கான் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஒரு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
இதுதவிர குஜராத் மாநிலத்திலும் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. ஆனால் சுஸுகி மோட்டார் குஜராத் (Suzuki Motor Gujarat - SMG) நிறுவனத்தால் இந்த தொழிற்சாலை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 7.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து டிமாண்ட் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே ஹரியான மாநிலம் சோனிபட் பகுதியில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சோனிபட் தொழிற்சாலையில் முதற்கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாயை மாருதி சுஸுகி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
இந்த தொழிற்சாலை வரும் 2025ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஆரம்பத்தில் ஒரு ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்களாக இருக்கும். இதுதவிர மேலும் ஒரு புதிய தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த புதிய தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் கார்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனிபட் தொழிற்சாலை மற்றும் இந்த புதிய தொழிற்சாலை ஆகிய 2 தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் சோனிபட் தொழிற்சாலையின் திறன் முழு அளவில் பயன்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் டிமாண்ட் அதைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் ஒரு வருடத்திற்கு 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில், மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் சோனிபட் தொழிற்சாலையை விட, இந்த தொழிற்சாலையில் அதிகமான தொகை முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் பெரும் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் கார்களுக்கான டிமாண்ட் மேலும் அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துதான், புதிய தொழிற்சாலை குறித்த முடிவை மாருதி சுஸுகி எடுத்திருப்பதாக தெரிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும். பெரிய அளவிலான காத்திருப்பு காலம் (Waiting Period) இல்லாமல், வாடிக்கையாளர்கள் கார்களை எளிதாக டெலிவரி (Delivery) பெறுவதற்கு இது உதவி செய்யும். இந்த புதிய தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும் என்பதும் மகிழ்ச்சியான விஷயம்தான்!


Click it and Unblock the Notifications








