மாருதி சுஸுகி ஷோரூம்களை இனி தெருவுக்கு ஒன்று பார்க்கலாம் போலயே!! ஓ... அவரே சொல்லிட்டாரா? அப்போ நிஜமா நடக்கும்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் 2025ஆம் வருடத்திற்கு உள்ளாக 57 புதிய நெக்ஸா டீலர்ஷிப் மையங்களை திறக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்தும், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், மாருதி சுஸுகி ஆகும். இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி சமீப காலமாக சந்தையில் புது புது கார்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ உள்ளிட்டவை மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து கடந்த 1 வருடத்தில் சந்தைக்கு வந்த புதிய கார்களாகும்.

மேலும், இதற்கேற்ப டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் முனைப்பில் மாருதி சுஸுகி உள்ளது. மாருதி சுஸுகி கார்கள் அரேனா மற்றும் நெக்ஸா என இரு விதமான டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அரேனா டீலர்ஷிப் மையத்தில் மாருதி சுஸுகியின் விலை குறைவான கார்களும், நெக்ஸா டீலர்ஷிப் மையத்தின் வாயிலாக சற்று விலைமிக்க மாருதி சுஸுகி கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றில் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம்களை இந்தியாவில் புதியதாக 57 இடங்களில் வருகிற 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக மாருதி சுஸுகி நிறுவனம் திறக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் முதன்மை நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை கார்களினாலேயே பிரபலமானது. ஆனால் சமீப காலமாக இந்த நிறுவனத்தின் பிரீமியம் தர கார்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அடுத்ததடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் விதமாக 2025 மார்ச் மாதத்திற்கு உள்ளாக புதியதாக 57 நெக்ஸா டீலர்ஷிப் மையங்களை மாருதி சுஸுகி நிறுவனம் திறக்கவுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு தற்சமயம் இந்தியாவில் சுமார் 468 நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் உள்ளன. இதில் முதல் நெக்ஸா டீலர்ஷிப் மையம் 2015 ஜூலை மாதத்தில் டெல்லியில் துவார்கா என்ற பகுதியில் திறக்கப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கடந்த 2023 ஏப்ரல் - ஜூலை மாத மொத்த உள்நாட்டு விற்பனையில் கிட்டத்தட்ட 31.9% நெக்ஸா டீலர்ஷிப் மையங்களின் மூலமாக கிடைத்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் இதே ஏப்ரல்- ஜூலை மாத மாருதி சுஸுகியின் உள்நாட்டு விற்பனையில் வெறும் 22.4% மட்டுமே நெக்ஸா டீலர்ஷிப் மையங்களின் பங்காக இருந்தது. இந்திய சந்தையில் தற்சமயம் மொத்தம் 17 விதமான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது. அவற்றில், பலேனோ, இக்னிஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி, ஃப்ரான்க்ஸ், சியாஸ், இன்விக்டோ மற்றும் எக்ஸ்.எல்6 உள்ளிட்ட 8 கார் மாடல்கள் நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் இன்விக்டோ மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆனது கடந்த ஜூலை 5ஆம் தேதி தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.20 இலட்சத்திற்கு மேல் விலை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாருதி சுஸுகி கார் இன்விக்டோ ஆகும். மாருதி சுஸுகிக்கு 468 நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் இருக்க, மறுப்பக்கம் 2,842 அரேனா டீலர்ஷிப் மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைவான கார்களின் மூலமாகவே மக்கள் முன் அறிமுகமாகினாலும், மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியை கண்டுக் கொண்டு, தனது வளர்ச்சி பாதையில் தொடர்ந்து முன்னேறி கொண்டு செல்கிறது. அரேனா, நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் மட்டுமின்றி, சூப்பர் கேரி என்ற ஒரேயொரு கமர்ஷியல் வாகனத்தை விற்பனை செய்வதற்காக கமர்ஷியல் அவுட்லெட்களையும் மாருதி சுஸுகி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








