2 புதிய கார்களை கொண்டு வந்து மார்கெட்டையே அலற விட மாருதி திட்டம்! அடுத்த வாரம் பெரிய சம்பவமே காத்திருக்கிறது!
மாருதி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் 2 புதிய எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தப்போவதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார். எஸ்யூவி செக்மெண்டில் மந்தமாகச் செயல்படும் மாருதி நிறுவனத்தை இந்த கார்கள் தூக்கி நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் மாருதி. இந்நிறுவனம் தான் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கிட்டத்தட்ட எல்லா செக்மெண்டிலுமே கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மாருதி நிறுவனம் இந்தியாவில் அசைக்க முடியாத ஒரு உச்சத்தில் இருக்கிறது. என்னதான் மாருதி நிறுவனம் சிறப்பான விற்பனையிலிருந்தாலும் எஸ்யூவி செக்சமெண்டில் மந்தமாகத் தான் இருக்கிறது.

எஸ்யூவி செக்மெண்ட்
இந்தியாவில் தற்போது எஸ்யூவி செக்மெண்ட் தான் அதிகமான கார்கள் விற்பனையாகும் செக்மெண்டாக இருக்கிறது. இந்த செக்மெண்டில் தனது கார்களை இறக்கப் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் எஸ்யூவி செக்மெண்டில் தனது சிறப்பான கார்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் மாருதி நிறுவனத்திற்கு எஸ்யூவி செக்மெண்டில் மிகவும் குறைவான கார் மட்டுமே மார்கெட்டில் இருக்கிறது.
மாருதி நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் விட்டாரா பிரெஸ்ஸா என்ற கார் அறிமுகமாகிப் பிரபலமானது. அந்த ஒரு கார் மட்டுமே இந்த நிலையில் மாருதி நிறுவனம் இதையே இரண்டாகப் பிரித்து பிரெஸ்ஸாவை தனி காராகவும், விட்டாராவை கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் தனி காராகவும் களம் இறக்கியுள்ளது. தற்போது எஸ்யூவி செக்மெண்டில் மாருதிக்கு 2 கார்கள் மட்டுமே இருக்கின்றன. அதிலும் கிராண்ட் விட்டாரா மிகச் சமீபத்தில் அறிமுகமான காராகும்.

செயல் இயக்குநர் பேட்டி!
இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது எஸ்யூவி செக்மெண்டில் 2 புதிய கார்களை அறிமுகப்படுத்தப்போவதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சஷாங் ஸ்ரீவத்சவா சமீபத்தில் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் 2023ம் ஆண்டு மாருதி எஸ்யூவி செக்மெண்டிற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் 2 புதிய எஸ்யூவிகளை களம் இறக்கப்போகிற தகவலை வெளியிட்டார்.
அந்த கேள்வி அவர் அளித்த பதிலாவது : "இந்தியாவில் எஸ்யூவி செக்மெண்டில் மொத்தம் 46 கார்கள் இருக்கிறது. அதில் மாருதி நிறுவனத்தின் கார்கள் 2 தான். சமீபத்தில் தான் கிராண்ட் விட்டாரா காரை அறிமுகப்படுத்தினோம். முன்னதாக பிரெஸ்ஸா காரின் அப்டேட் வெர்ஷனையும் அறிமுகப்படுத்தினோம். இந்த 2023ம் ஆண்டு மாருதி நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டை பலப்படுத்தும் விதமாக 2 புதிய எஸ்யூவி கார்களை களம் இறக்கவுள்ளோம்.
50 சதவீதம் மார்கெட் ஷேர்!
இந்த 2 புதிய கார்கள் மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கும். இதனால் அதிகமான மக்கள் இந்த காரை வாங்குவார்கள். இதனால் மாருதி நிறுவனத்திற்கு எஸ்யூவி செக்மெண்டல் விற்பனை அதிகமாகும். இதன் மூலம் வருங்காலத்தில் இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் 50 சதவீதம் மாருதி நிறுவனத்தின் காராக தான் இருக்கும் என நம்புகிறோம். " எனக் கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் : "எஸ்யூவி அல்லாத செக்மெண்டில் மாருதி நிறுவனத்திற்கு தற்போது 65 சதவீத மார்கெட் பங்கு இருக்கிறது. கடந்தாண்டும் மார்கெட் பங்கு அதிகரித்துள்ளது. இதனால் எஸ்யூவி இல்லாத செக்மெண்ட்களில் மாருதி சிறப்பாகவே செயல்படுகிறது. எஸ்யூவி செக்மெண்டில் தான் வீக்காக இருக்கிறோம். எஸ்யூவி மார்கெட் பங்கு மற்றும் எஸ்யூவி அல்லாத மார்கெட் பங்கு என இரண்டையும் சேர்க்கும் போது ஒட்டு மொத்த மார்கெட் பங்கு 45 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
விற்பனை சரிவு
எங்கள் திட்டம் ஒட்டு மொத்த மார்கெட் பங்கில் 50 சதவீதமாவது மாருதி இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இதனால் எங்கள் போர்ட்ஃபோலியோவை பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார். அடுத்ததாகக் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை மந்தமானது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் "கடந்த டிசம்பர் மாத விற்பனை மற்ற மாதங்களை விட ஒப்பிடும் போது குறைவாக வந்திருக்கிறது. இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விஷயம்தான் ஆண்டு கடைசியில் டீலர்கள் தங்களிடம் இருக்கும் கார்களை குறைவாகவே வைத்திருப்பார்கள். இதன் பிரதிபலிப்பு தான் இந்த விற்பனை சரிவு" எனக் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது : "கடந்தாண்டு இந்தியாவில் விற்பனையான ஒட்டு மொத்த கார்களின் எண்ணிக்கை 2.76 லட்சம், கடந்தாண்டு 2.55 லட்சம் விற்பனையாகியிருந்தது. 8 சதவீத வளர்ச்சியை ஒட்டு மொத்த துறையும் பெற்றுள்ளது. இது ஆலையிலிருந்து டீலர்களுக்கு சென்ற கார்களின் கணக்கு தான், டீலர்கள் கடந்த டிசம்பர் மாதம் 4.11 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தனர். கடந்தாண்டு டிசம்பரில் 3.20 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தனர். 28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது நமக்கு உணர்த்துவது மொத்த விற்பனை குறைவு, ஆனால் சில்லறை விற்பனை சிறப்பான விற்பனை தான் " என விளக்கம் அளித்தார்.
காத்திருப்பு காலம்!
இதன் மூலம் மாருதி நிறுவனம் 2023ம் ஆண்டு 2 புதிய எஸ்யூவி கார்களை மார்கெட்டிற்கு கொண்டு வரப்போகிறது. இந்த கார்களை அடுத்த வாரம் துவங்கவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இந்நிறுவனம் அப்டேட் மற்றும் புதிய வெளியீடு சேர்த்து மொத்தம் 9 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் எர்டிகா, எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய கார்களுக்கு காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது.
இந்த காத்திருப்பு காலத்தைக் குறைக்கவும் இந்நிறுவனம் முயன்று வருவதாகக் கூறியிருந்தார். மாருதி நிறுவனத்தின் 2 எஸ்யூவி கார்கள், மற்றும் இந்த புதிய திட்டங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








