ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனையில் சாதனை படைத்த மாருதி! இந்த இடத்தை பிடிக்க ஒருத்தன் பொறந்து வந்தாலும் முடியாது
மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனையில் இதுவரை எந்த நிறுவனமும் செய்திராத வரலாற்று சாதனையைப் படைத்து இருப்பதாக அறிவித்து உள்ளது. அது படைத்திருக்கும் சாதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்,வாங்க.
இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டாக மாருதி சுஸுகி இருக்கின்றது. மிக சிறந்த மைலேஜ் திறன், பட்ஜெட் விலை மற்றும் குறைவான பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றிற்கு பெயர்போன தயாரிப்பாக மாருதியின் வாகனங்கள் உள்ளன. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் ஈ'க்களை போல மாருதி சுஸுகியின் பக்கம் மொய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனையில் மிகப் பெரிய வரலாற்று சாதனையை தங்கள் நிறுவனம் படைத்திருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இதுவரை எந்தவொரு இந்திய கார் பிராண்டும் செய்திராத விற்பனை வரலாற்று சாதனையையே அது படைத்திருக்கின்றது.
நிறுவனம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட கார் விற்பனையைத் தொடங்கி இதுவரை 10 லட்சம் யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்திருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்து உள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் மட்டுமே நிறுவனம் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ஆப்ஷன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏஜிஎஸ் என்றழைக்கப்படும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் (Auto Gear Shift), 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT), அட்வான்ஸ்டு 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் எலெக்ட்ரானிக் சிவிடி ஆகிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையே மாருதி சுஸுகி அதன் கார்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் 16 வகையான கார் மாடல்களில் இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இந்த கியர்பாக்ஸ் கொண்ட தேர்வுகளுக்கே நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் 65 சதவீதம் அதன் ஏஜிஎஸ் தொழில்நுட்பம் கொண்டதாகும்.
இந்த அம்சம் கொண்ட காரை நிறுவனம் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியான இடத்தில் ஏடி டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்த தானியங்கி கியர்பாக்ஸ் கார்கள் விற்பனையில் 27 சதவீத பங்கை இந்த காரே கொண்டிருக்கின்றன.
இதற்கு அடுத்தபடியான நிறுவனத்தின் மற்ற ஆட்டோமேட்டிக் கார்கள் உள்ளன. இதேபோல், எந்தெந்த மாநிலங்களில் நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு அதிகம் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கிற விபரத்தையும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு நிறுவனத்தின் அதிகம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.
இதேபோல், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இடம் பிடித்திருக்கின்றன. இந்த மாநிலங்களில் மட்டுமில்லைங்க இன்னும் பல இந்திய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. மாருதியின் ஏஜிஎஸ் கியர்பாக்ஸிற்கு அதிகம் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷனை நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல்களான ஆல்டோ கே 10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர், பலினோ மற்றும் ஃபரான்க்ஸ் உள்ளிட்ட கார் மாடல்களிலேய இந்த கியர்பாக்ஸ் தேர்வை மாருதி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் பிராண்டாக மாருதி சுஸுகி இருக்கின்றது. இந்த நிறுவனமே இந்தியாவில் எப்போதும் கார்கள் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. இத்தகைய நிறுவனம் ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








