வெடியை போட தயாரா?.. ஜிம்னியின் உற்பத்தி பணிகள் தொடங்கியாச்சு.. மஹிந்திரா தாரோட நிலைமைதான் என்னவாகும்னே தெரியல!
மாருதி சுஸுகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்னி (5 கதவுகள் கொண்ட வெர்ஷன்) காரின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஜூன் மாதத்திற்கு இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வருகையை முன்னிட்டே உற்பத்தி பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் மலை அளவில் குவிந்துக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி 25 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு குவிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் நாட்களில் இது இன்னும் சில ஆயிரங்களாக கூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஜிம்னியின் உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன. ஜிம்னிக்கான புக்கிங்குகள் ஜனவரியில் இருந்தே ஏற்கப்ட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. தற்போது ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் ஜிம்னிக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த காரின் விலைகள் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை.
வரும் நாட்களில் அறிமுகத்தின்போது அதன் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே, அதாவது, விலைகள்கூட அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஜிம்னிக்கான புக்கிங்குகள் பாரிய அளவில் குவிந்துக் கொண்டிருக்கின்றன. ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே ஜிம்னி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஓர் பிரீமியம் வசதிகள் நிறைந்த கார் மாடல் என்பதால் இதைவிட அதிக விலையில்கூட விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ஜிம்னி உயர்நிலை தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப வசதிகளை ஜிம்னியில் மாருதி சுஸுகி வாரி வழங்கி இருக்கின்றது.
9 அங்குல டச் ஸ்கிரீன் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பிரீமியம் தர நவீன தொழில்நுட்ப வசதிகளையே மாருதி ஜிம்னியில் வழங்கி இருக்கின்றது. இதன் இன்ஃபோடெயினமென்ட் திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஜிம்னியின் வருகை மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகிய ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக கார்களின் விற்பனையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றிற்கு போட்டியாகவே ஜிம்னியை மாருதி இந்தியாவில் களமிறக்குகின்றது. இரு போட்டி கார் மாடல்களைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகளுடனும், மலிவு விலையிலும் ஜிம்னி விற்பனைக்கு வர இருக்கின்றது.
முன்னதாக இந்த காரின் வருகை மேத மாதம் இரண்டாம் வாரத்திலேயே அரங்கேறிவிடும் என கூறப்பட்டது. ஆனால், இப்போது ஜூன் தொடங்குவதற்குள் ஜிம்னி விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் தெரியாத நிலையே தென்படுகின்றது.
ஜிம்னியில் பாதுகாப்பு வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா உள்ளிட்டவற்றை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
மோட்டாரை பொருத்த வரை மாருதி சுஸுகி ஜிம்னியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வே வழங்கப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 134 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஜிம்னியில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னி காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பைப் பார்க்கும்போது உண்மையில் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்காவிற்கு கடுமையான போட்டியாளனாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தார் காருக்கு ஜிம்னி ஆக சிறந்த எதிரியாகவே மாற இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









