லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகம்! பைக் கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூட போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.
அனேகமாக புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், வரும் 2024ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக நடப்பு அக்டோபர் மாத இறுதியிலேயே புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் அக்டோபர் 26ம் தேதியில் இருந்து நவம்பர் 5ம் தேதி வரை, 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோ நடைபெறவுள்ளது. இந்த வாகன திருவிழாவில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் காட்சிக்கு வைக்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கான்செப்ட் (Concept) மாடலின் புகைப்படத்தை, சுஸுகி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் டிசைனில் (Design) பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.

இதன்படி முன் பகுதியில் புதிய பம்பர் மற்றும் க்ரில் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், கேமராவுடன் கூடிய கருப்பு நிற ஓஆர்விஎம்கள், கருப்பு நிற மேற்கூரை மற்றும் பில்லர்கள் ஆகிய அம்சங்களும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச சந்தைகளுக்கான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில், ட்யூயல் சென்சார் பிரேக் சப்போர்ட், அடாப்டிவ் ஹைபீம் அஸிஸ்ட் மற்றும் டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அட்வான்ஸ்டு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இந்த வசதிகள் எல்லாம் வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செயல்திறனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், ஹைப்ரிட் (Hybrid) தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் கான்செப்ட் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அதேபோல் பைக்குகளை போல் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்படுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








