ஒரே மாதத்தில் 1.5 லட்ச கார்களை விற்பது எல்லாம் வேற லெவல்!! மாருதி சுஸுகி இதனால் தான் ராஜாவாக இருக்குது போல!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2023 ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ஒவ்வொரு கார்-பிரிவு வாரியாக இனி பார்க்கலாம்.
இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி, மார்க்கெட்டில் பல்வேறு மாடல்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதனாலும், நாடு முழுவதும் பரவலாக சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டு இருப்பதாலும் நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது கார்களை அப்டேட் செய்யவும், பழைய கார்களை விற்பனையில் இருந்து நீக்கி அவற்றிற்கு பதிலாக புதிய கார்களை கொண்டுவரவும் மாருதி சுஸுகி மறந்தது இல்லை. கார்கள் மட்டுமின்றி, மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சூப்பர் கேரி என்ற கமர்ஷியல் வாகனமும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாருதி சுஸுகியின் கார்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் உள்நாட்டில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த 2023 ஜூலை மாதத்தை பொறுத்தவரையில், ஒட்டு மொத்தமாக 1,81,630 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது. இதில், 1,59,431 வாகனங்கள் இந்திய மார்க்கெட்டிலும், மீதி 22,199 வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டவை ஆகும். ஆனால் 2022 ஜூலை மாதத்தில் 1,55,605 வாகனங்களை உள்நாட்டிலும், 20,311 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் என ஒட்டு மொத்தமாக 1,75,916 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் உலகளவில் விற்பனை செய்திருந்தது.

மாருதி சுஸுகியின் ஒரேயொரு கமர்ஷியல் வாகனமான சூப்பர் கேரி கடந்த ஜூலை மாதத்தில் 2,559 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2022 ஜூலையில் 2,816 சூப்பர் கேரி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கார்களை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், இந்திய சந்தையில் கடந்த 2023 ஜூலை மாதத்தில் 1,52,126 மாருதி சுஸுகி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை காட்டிலும் ஏறக்குறைய 10,000 யூனிட்கள் குறைவாக, 2022 ஜூலையில் 1,42,850 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்து இருந்தது.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக இருப்பினும் வெளிநாடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் குறைவான எண்ணிக்கையிலேயே கார்களை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்கிறது. இந்திய மார்க்கெட்டில் கார்களை பல்வேறு பிரிவுகளில் மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது. இதில், மிகவும் சிறிய அளவிலான மினி பிரிவில் மாருதி சுஸுகி ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டும் கடந்த ஜூலையில் மொத்தமாக 9,590 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 2022 ஜூலையில் இவை இரண்டும் 20,333 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. காம்பெக்ட் பிரிவில் பலேனோ, செலேரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன் ஆர் என 7 விதமான மாடல்களை மாருதி சுஸுகி சந்தைப்படுத்துக்கிறது. இவை ஏழும் மொத்தமாக கடந்த ஜூலை மாதத்தில் 67,102 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனை எண்ணிக்கையும் 2022 ஜூலையில் 84,818 ஆக பதிவாகி இருந்தது.
மிட்-சைஸ் கார்கள் பிரிவில் சியாஸ் என்ற ஒரேயொரு மாடலை மட்டுமே மாருதி சுஸுகி கொண்டுள்ளது. மிட்-சைஸ் செடான் காரான சியாஸ் கடந்த ஜூலை மாதத்தில் 1,348 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2022 ஜூலையிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான சியாஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அளவில் சற்று பெரிய எஸ்யூவி & எம்பிவி கார்களாக பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்.எல்6 உள்ளிட்ட மாடல்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது.

இந்த எஸ்யூவி & எம்பிவி கார்கள் மொத்தமாக கடந்த 2023 ஜூலை மாதத்தில் 62,049 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மாருதி சுஸுகி கார்களின் விற்பனை யுடிலிட்டி வாகனங்கள் பிரிவில் தான் அதிகரித்துள்ளது. ஏனெனில் 2022 ஜூலையில் இந்த பிரிவில் வெறும் 23,272 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. மாருதி சுஸுகியின் பயணிகள் வேன் மாடலான ஈக்கோ கடந்த மாதத்தில் 12,037 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக இருந்தாலும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கமர்ஷியல் வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. அதேபோல், மிட்-சைஸ் கார்கள் பிரிவிலும் கடந்த பல வருடங்களாக சியாஸ் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் உள்ள சுஸுகி தொழிற்சாலை உடனான ஒப்பந்தத்தை மாருதி சுஸுகி நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications









