மாருதி வேகன்ஆர் கார் ஒன்று இருந்தால் போதும், இதை உருவாக்கிடலாம்!! நம்ம ஊர் மக்களின் திறமைக்கு...
மாருதி சுஸுகி வேகன்ஆர் (Wagon R) காரா அல்லது ஆட்டோ ரிக்ஷாவா என குழப்பும் வகையில் ஓர் வாகனத்தின் வீடியோ இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இது ஆட்டோவா அல்லது காரா என பார்ப்போரை குழப்பும் வகையில் இருக்கும் இந்த வாகனத்தை பற்றி இனி பார்க்கலாம்.
சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், தங்களது விருப்பத்திற்கேற்ப வாகனங்களை மாடிஃபை செய்வதை சிலர் மறப்பதில்லை. சாதாரண கார்கள் & பைக்குகளை விலையுயர்ந்த வாகனங்கள் போல் சில வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொண்டுள்ளதை கூட பார்த்துள்ளோம். இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான முறையில் மாடிஃபை செய்யப்படும் வாகனங்களின் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியிடப்படுவது உண்டு.

அவ்வாறு மாடிஃபை செய்யப்பட்ட மாருதி வேகன்ஆர் காரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவை பார்க்கும்போது, இது காரா அல்லது ஆட்டோவா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. ஏனெனில், இந்த மாடிஃபை வாகனத்தின் முன்பக்கத்தில் ஆட்டோவின் முதல் பாதியும், பின்பக்கத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பின்பகுதியும் உள்ளன.
அதாவது, ஒரு ஆட்டோவையும், ஒரு காரையும் இணைத்து கமர்ஷியல் போக்குவரத்துக்கான ஆட்டோவை உருவாக்கி உள்ளனர். மனிஷ் தியாகி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வாகனம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரையில் மட்டுமே 3 கோடிக்கும் மேலானோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலரோ இந்த வாகனத்திற்கு தங்களுக்கு தோன்றிய பெயர்களை வைத்து வருகின்றனர். அதாவது, இது பாதி ஆட்டோ, பாதி வேகன்ஆர் கார் என்பதால், சிலர் இந்த வாகனத்தை "ஆகன்-ஆர்" என்றும், சிலர் இது ஒரு சிறந்த கிராஸ்ஓவர் வாகனம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது ஒன்றும் புதுமையான விஷயமல்ல. ஏனெனில், பலர் தங்களது கனவுகளை மாடிஃபிகேஷன்கள் மூலமாகவே, குறைந்தப்பட்சம் பொய்யாக ஆவது நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த வகையில், சமீபத்தில் மெக்கானிக் ஒருவர் பஜாஜ் டோமினார் 400 பைக்கை சுஸுகி ஹயபுஸா என்ற சூப்பர்பைக் போன்று மாடிஃபை செய்திருந்தார்.

ஹயபுஸா போன்று மாற்றுவதற்காக இந்த பஜாஜ் டோமினார் 400 பைக்கின் பல்வேறு பேனல்கள் புதியதாக பொருத்தப்பட்டன. இந்த மாடிஃபிகேஷன் வேலைகளை செய்து முடிக்க இவர்களுக்கு கிட்டத்தட்ட 6 மாத காலம் தேவைப்பட்டுள்ளது. இந்த 6 மாத காலத்தில் இந்த டோமினார் 400 பைக் வேறெந்த வேலைகளுக்கும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர். சிவப்பு நிறத்தில், சுஸுகி ஹயபுஸா பைக் போன்று இருக்கும் இந்த மாடிஃபை டோமினார் 400 பைக் குறித்த படங்கள் இணையத்தில் வைரலாகின.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்ன தான் இந்த மாடிஃபை வாகனங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவற்றை சாலையில் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. ஏனெனில், நம் நாட்டில் மாடிஃபிகேஷன் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. இதனால், கடந்த சில வருடங்களில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது கணிசமாக குறைந்துள்ளது. வரும் காலத்தில் இவை இன்னும் குறையும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








