Maruti Suzuki XL6 காரை இனி இந்த விலையில்தான் வாங்க முடியுமாம்... என்ஜினை அப்டேட் செஞ்சிருக்காங்க!!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் எக்ஸ்.எல்6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதன்படி, எக்ஸ்.எல்6 காரின் விலைகள் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் விலைமிக்க கார்களுள் எக்ஸ்.எல்6 மாடலும் ஒன்று ஆகும். எர்டிகா எம்பிவி மாடலின் பிரீமியம் தர வெர்சனாக விளங்கும் எக்ஸ்.எல்6 முற்றிலும் புதிய தோற்றத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் சரியாக இதே ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால், அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், புதிய எக்ஸ்.எல்6 காரின் விலைகளை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது.

இந்த புதிய விலையுயர்வின்படி, மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 காரின் வேரியண்ட்கள் அனைத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் ஒரே அளவாக ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.44 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த விலையுயர்வுக்கு ஏற்ப எக்ஸ்.எல்6 காரில் அப்டேட் செய்யப்பட்ட என்ஜினை வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட மாசு உமிழ்வு கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ரியாக்ட் செய்யும் விதமாக, எக்ஸ்.எல்6 காரின் என்ஜின் ரியல்-டிரைவ்-எமிஷனுக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டு இருப்பது மட்டுமின்றி, எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலையும் இனி ஏற்கும். எக்ஸ்.எல்6 பிரீமியம் தர எம்பிவி காரில் 1.5 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 136 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை பெறலாம். இதனுடன், மாருதி சுஸுகி நிறுவனம் எக்ஸ்.எல்6 காரை சிஎன்ஜி வெர்சனிலும் விற்பனை செய்கிறது. எக்ஸ்.எல்6 சிஎன்ஜி காரிலும் மேற்கூறப்பட்ட அதே பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.
ஆனால் எக்ஸ்.எல்6 சிஎன்ஜி வெர்சனில் அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல் ஆனது 87 பிஎச்பி மற்றும் 121.5 என்எம் டார்க் திறனாக குறைகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், எக்ஸ்.எல்6 எம்பிவி காரில் 4 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம் (இஎஸ்பி), ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இவை மட்டுமின்றி, வெண்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி, 360-கோண சரவுண்ட் வியூ கேமிரா, ரூஃப்-இல் பொருத்தப்பட்ட ஏசி துளைகள், 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உள்ளிட்டவையும் மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 காரில் இடம்பெறுகின்றன. வெளிப்பக்கத்தில் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
மாருதி சுஸுகி எர்டிகாவின் விற்பனை ஆஹா... ஓஹோ என இருந்தாலும், எக்ஸ்.எல்6 காரின் விற்பனை பெரிய அளவில் இல்லாததை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். இதற்கு இதன் சற்று அதிகப்படியான விலை ஒரு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தவொரு காரின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. அதன்படியே தற்போது எக்ஸ்.எல்6 காரின் விலையை மாருதி சுஸுகி உயர்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









