அசத்தலான பின்னழகுடன் இந்தியாவில் வலம் வந்த பேஸ்லிஃப்ட் வேகன்ஆர்! விலையுயர்ந்த கார்களுக்கே டஃப் கொடுக்கும்போல!
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. பட்ஜெட் விலையில் கிடைப்பதாலும், பராமரிப்பு செலவு குறைவு என்கிற காரணத்தினாலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, மைலேஜ் தருவதிலும் இநத் கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது.
இதனால்தான் நீண்ட நாட்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கார் மாடலாக வேகன்ஆர் காட்சியளிக்கின்றது. ஆமாங்க, மாருதி சுஸுகியின் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் வேகன்ஆர்-ம் ஒன்றாகும். இத்தகைய காரையே மாருதி சுஸுகி தற்போது அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Image Courtesy இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய தோற்றம் கொண்ட மாருதி சுஸுகி வேகன்ஆர் இந்திய சாலைகளில் சுற்றி வந்ததாக இணையத்தில் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி-யைவிட அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட வேகன்ஆர் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் படமே இடம் பெற்றிருக்கின்றது.
அப்டேட் செய்யப்பட்ட வேகன்ஆர் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படமே அது ஆகும். இந்த அப்டேட் வெர்ஷன் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆர்-ஐக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றத்தை புதிய வேகன்ஆர் கொண்டிருக்கின்றது.
இதுபோன்று தொடர்ச்சியாக இந்த கார் மாடலில் அப்டேட்டை வழங்கி வருவதன் காரணத்தினாலேயே அது சந்தையில் தற்போது வரை நீடித்து நின்றுக் கொண்டிருக்கின்றது. ஓர் நடுநிலையான அப்டேட்டை புதிய வேகன்ஆரில் மாருதி சுஸுகி செய்திருப்பதை இப்போது வெளியாகி இருக்கும் படங்கள் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது.
மிக முக்கியமாக பின் பக்கத்தில் உள்ள மின் விளக்குகள், பம்பர் மற்றும் டெயில்கேட்டின் தோற்றம் உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றத்தால் அக்காரின் பின்னழகு அதிக கவர்ச்சியானதாக மாறி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல மாற்றங்கள் இந்த காரில் செய்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது, காரின் முன் பக்க கிரில், லைட் செட்-அப் மற்றும் பம்பர் உள்ளிட்டவற்றிலேயே மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், காரின் உட்புறத்திலும் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், புதிய திரைகள், புதிய இன்டீரியர் நிற ஆப்ஷன் ஆகியவை இந்த ஃபேஸ்லிஃப்ட் வேகன்ஆர் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது. ஆகையால், இப்போது விற்பனையில் இருக்கும் அதே மோட்டார் ஆப்ஷனே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி சுஸுகி வேகன்ஆர் காரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி வேகன்ஆர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.
பெட்ரோல் ஆப்ஷனுடன் சேர்த்து இந்த காரில் சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகின்றது. இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி வசதிக் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக வேகன்ஆர் சிஎன்ஜி காட்சியளிக்கின்றது. மேலும், இந்த காரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆப்ஷனும் வேகன்ஆர் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திலேயே இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வசதிக் கொண்ட வேகன்ஆர் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேசமயம், 2024 ஆம் ஆண்டிற்குள் இதன் வருகை அமைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி வேகன்ஆர் ஏழைகளின் கார் மாடலாகப் பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலை சந்தைக்கு ஏற்ப மாருதி சுஸுகி அப்டேட் செய்யும் பணிகளை மேற்கொண்டிருப்பது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த நிறுவனம் வருகின்ற 2024 ஜனவரி முதல் அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








