Mercedes-AMG GT63 S E இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் மணிக்கு 316 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஆடம்பர ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் இ (Mercedes-AMG GT 63 S E), இதுவே அந்த அதி வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட சொகுசு கார் ஆகும்.
இதையே ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் இ, ஓர் நான்கு கதவுகள் கொண்ட கூபே ரக காராகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 3.3 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 4 கோடியைத் தொட அல்லது தாண்ட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இது ஓர் பிளக்-இன் ஹைபிரிட் வசதிக் கொண்ட ஆடம்பர காராகும். அதாவது, இந்த காரில் ஐசிஇ மோட்டார் உடன் சேர்த்து எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப்பும் வழங்கப்பட்டு இருக்கும். இந்த இரண்டுமே காரின் இயக்கத்திற்கு உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மின்மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்க தனி பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும். அந்த பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய தனியாக சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது, பிளக் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இதில் வழங்கப்பட்டு இருக்கும்.

6.1 kWh பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 12 கிமீ தூரம் வரை பெட்ரோல் இல்லாமலேயே பயணிக்க முடியும். இந்த பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் வாயிலாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இத்துடன் சேர்த்தே, ட்வின் டர்போசார்ஜட் 4.0 லிட்டர் வி8 எஞ்ஜின் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ்இ சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 843 பிஎச்பி பவரையும், 1,470 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடே மணிக்கு 316 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க, வெறும் 2.9 செகண்டுகளில் இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றது.

இது ஓர் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட சொகுசு காராகும். இந்த கார் தொழில்நுட்ப வசதியிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 12.4 அங்குல திரைகள் இரண்டு இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் திரையாகவும், மற்றொன்று, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் பயன்படும்.
இந்த இன்ஃபோடெயின்மென்ட் திரை, டச் மற்றும் நிறுவனத்தின் லேட்டஸ்ட் எம்பியூஎக்ஸ் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. காரின் உட்பகுதியில் நிரம்பி வழியும் வகையில் பிரீமியம் தர அம்சங்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் டைப் இருக்கை, கார்பன் ஃபைபர் மற்றும் அல்கான்ட்ரா இன்செர்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், பன்முக கன்ட்ரோல்கள் மற்றும் ஷார்ட்கட் டயல்கள் கொண்ட ஏஎம்ஜி ஸ்டியரிங் வீல் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லைங்க இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் மிகவும் அழகிய வாகனமாகவும் வடிவமைத்திருக்கின்றது. புதிய பம்பர்கள், அலாய் வீல்கள், புதிய எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் லைட்டிங் செட்-அப் ஆகியவை மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் இ கூபே காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் 9ஜி ஏஎம்ஜி ஸ்பீடு ஷிஃப்ட் தானியங்கி டிரான்ஸ்மிஷனே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த டிரான்ஸ்மிஷன் வாயிலாக காரின் அனைத்து வீல்களும் இயக்கம் கடத்தப்படுகின்றது. இத்துடன், ஏஎம்ஜி டைனமிக் செலக்ட் டிரைவிங் மோட்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்த காரை இயக்கும்போது எஃப்1 ரக வாகனங்களை இயக்கிய அனுபவம் கிடைக்கும். இந்த ரக கார்களை தழுவியே மெர்சிடிஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் இ கூபே காரை உருவாக்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இதற்கு அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









