மெர்சிடிஸின் புதிய லக்சரி கார்... இல்லை... இல்லை ரோட்டில் இயங்கும் சொகுசு கப்பல்!! ஷோரூம் விலை இவ்வளவா?
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல்55 (Mercedes-AMG SL55) லக்சரி கார், ஜெர்மன் நிறுவனத்தின் மற்றுமொரு பிரம்மாண்ட படைப்பாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சொகுசு மெர்சிடிஸ் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை காரின் விலை உடன் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் லக்சரி அம்சங்கள் அதிகம் கொண்டவையாக, அதேநேரம் அதிக என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடியவையாக விளங்குகின்றன. இதனாலேயே இவற்றின் விலைகளும் அதிகம். அத்தகைய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் வரிசையில் புதிய எஸ்.எல்55 என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.35 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன்பு 2012 வரையில் 5-ஆம் தலைமுறை மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல் கார் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. இடையில் 6ஆம் தலைமுறை மாடல் அறிமுகமாகாமல், நேரடியாக 7ஆம் தலைமுறை மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் கடந்த 69 வருடங்களாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
இத்தனை வருடங்களில் உருவாக்கப்பட்ட மாடல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் 7ஆம் தலைமுறை எஸ்.எல்55 காரை மெர்சிடிஸ் நிறுவனம் கருதுகிறது. மெர்சிடிஸின் புதிய எம்.எஸ்.ஏ (MSA) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட ரோட்ஸ்டர் காராக புதிய ஏஎம்ஜி எஸ்.எல்55 கார் விளங்குகிறது. இதே எம்.எஸ்.ஏ பிளாட்ஃபாரத்தில்தான் அடுத்த தலைமுறை ஏஎம்ஜி ஜிடி ஸ்போர்ட்ஸ் காரையும் உருவாக்க மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகமாகி உள்ள புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல்55 காரின் நீளம் 4,705மிமீ, அகலம் 1,915மிமீ, உயரம் 1,359மிமீ மற்றும் முன்-பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,700மிமீ ஆகும். மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் 2+2 என இருக்கை அமைப்பை கொண்ட எஸ்.எல்55 காரை மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இது ஓர் கன்வெர்டபிள் கார் ஆகும். அதாவது காரின் மேற்கூரையை திறந்தும், மூடியும் கொள்ளலாம்.
கருப்பு, சிவப்பு மற்றும் கிரே என 3 விதமான நிறங்களில் கிடைக்கக்கூடிய காரின் மேற்கூரையை வெறும் 15 வினாடிகளில் மடக்கி வைத்து கொள்ளலாம். புதிய ஏஎம்ஜி எஸ்.எல்55 ரோட்ஸ்டர் காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 எம்177 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 5,500- 6,500 ஆர்பிஎம்-இல் 469 பிஎச்பி மற்றும் 2,250- 4,500 ஆர்பிஎம்-இல் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கியர்பாக்ஸ் ஆனது மெர்சிடிஸின் 4மேட்டிக்+ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக என்ஜின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பும். 1,950 கிலோ எடை கொண்ட புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல்55 காரின் வி8 என்ஜின் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் மூலமாக 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். இந்த ரோட்ஸ்டர் காரின் டாப்-ஸ்பீடு 295kmph ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் மெர்சிடிஸின் ஜெர்மன் ஸ்டைல் ரோட்ஸ்டர் கார். ஏஎம்ஜி பிரிவில் இருந்து மற்றுமொரு ஆற்றல்மிக்க கார். 300எஸ்.எல் என்ற ரோட்ஸ்டர் காரின் மூலமாக பலர் ரோட்ஸ்டர் கார்களை வடிவமைப்பதில் மெர்சிடிஸின் ரசிகர்களாகி இருப்பீர்கள். அத்தகையவர்கள் ரசிக்கும்படியாக புதிய எஸ்.எல்55 கார் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications









