இதுக்கு முன்னாடி கார் விலையை கேட்டு தலை தெறிக்க ஓடி இருக்கீங்களா! இந்த காரோட விலையை கேளுங்க கண்டிப்பா ஓடுவீக!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ஸ் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் (Mercedes-Benz G-class) சொகுசு காரை மீண்டும் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதன் ஜி400டி (G 400d) வேரியண்ட் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது டீசல் மோட்டார் கொண்ட தேர்வாகும்.
இதன் உடன் சேர்த்து மற்றுமொரு சிறப்பாக அட்வென்சர் எடிசன் (Adventure Edition) எனும் சிறப்பு பதிப்பையும் இதே கார் மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்தியாவிற்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சிறப்பு பதிப்பு இது ஆகும்.

அறிமுகமாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் ஜி 400டி கார் மாடலுக்கு ரூ. 2.55 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை 3 கோடி ரூபாயை தொட நேரிடும்.
இந்த அதிகபட்ச விலையிலேயே சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மேலும், இன்று முதலே புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டு இருக்கின்றன. ரூ. 1.5 லட்சம் செலுத்தி இந்த காரை புக் செய்து கொள்ளலாம். ஜி கிளாஸ் இதற்கு முன்னதாக இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு பின்னர் இப்போது அது மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. முன்பு விற்பனையில் இருந்ததைக் காட்டிலும் அது அதிக ஸ்போர்ட்டியான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக அட்வென்சர் எடிசன் மிகவும் ரக்கட் லுக்கில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் தோற்றமே அது ஆஃப்-ரோடு பயணத்திற்கு ரெடி என்பதை வெளிக்காட்டும் வகையில் இருக்கின்றது. இதில், கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட ஏணி, தனித்துவமான ஸ்பேர் வீல் கவர் மற்றும் 18 அங்குல சில்வர் நிற அலாய் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பிரத்யேகமான நிற தேர்வும் இதில் வழங்கப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கின்றது.

இதேபோல், வழக்கமான மாடலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ஜி கிளாஸ் ஜி400டி தேர்விலும் சில சூப்பரான அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. 20 அங்குல அலாய் வீல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பேர் வீல் கவர், சன்ரூஃப், இரட்டை திரைகள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும்), பர்மெஸ்டர் சரவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையே அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
தோற்றத்திலும், சிறப்பு வசதியிலும் மாறுபட்டுக் காட்சியளித்தாலும் சிறப்பு எடிசன் மற்றும் வழக்கமான பதிப்பு ஆகிய இரண்டிலும் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 326 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இயக்க திறன் நான்கு வீல்களுக்கும் செல்லும் வகையிலேயே இந்த காரை பென்ஸ் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. ஆஃப் ரோடு பயணத்தின்போது வாகனம் எங்கும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 4 மேட்டிக் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை அது வழங்கி இருக்கின்றது.
இத்துடன், ஜி மோட் எனும் ஆஃப் ரோடு டிரைவ்க்கான பிரத்யேக மோடும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மிக கரடு-முரடான சாலையை சமாளிக்கும் விதமாக இந்த காருக்கு 241 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதைக் கொண்டு 700 மிமீ ஆழமுள்ள நீர் பாதைகளைக் கூட சமாளிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மிக விலை உயரிய விலைக் கொண்ட கார்களின் பட்டியலில் மெர்சிடிஸ் பென்ஸின் இந்த காரும் இடம் பிடித்திருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முந்தைய வெர்ஷனுக்கு இவர்கள் அமோக ஆதரவை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









