3 மாதங்களில் 2வது முறையாக... பென்ஸ் கார்களின் விலைகள் இந்தியாவில் அதிகரிப்பு!! இம்முறை எவ்வளவு உயர்வு தெரியுமா
கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக கார்களின் விலைகளை பிரபலமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் அதிகரித்துள்ளது. எந்த நிறுவனம் அது? எதற்காக இந்த புதிய விலை உயர்வை கொண்டு வந்துள்ளது என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார் ஒன்றை தயாரிப்பதற்கு சிறு சிறு நெட், போல்ட்களில் ஆரம்பித்து பல்வேறு பாகங்கள் தேவை. அதிலிலும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்படும் லக்சரி கார்களில் எத்தனை பாகங்கள் அடங்கும் என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இதனாலேயே கார்களின் விலைகள் ஓர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் உயர்த்தப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் விற்பனை செய்ய்ப்படும் தனது கார்களின் விலைகளை உயர்த்திருக்கும் நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகும்.

வழக்கம்போல் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன உற்பத்தி செலவை காரணம் காட்டி மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த விலை உயர்வின்படி மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலைகள் 5%, அதாவது ரூ.2 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.12 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய விலைகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் அறிவிக்கும் 2வது விலை உயர்வு இதுவாகும்.
கடைசியாக கடந்த 2023 ஜனவரியில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. அப்போதும் காரின் விலைகளை 5% தான் மெர்சிடிஸ் உயர்த்தி இருந்தது. இந்த முறை இந்தியாவில் விலை குறைவான மெர்சிடிஸ்-பென்ஸ் காரான ஏ-கிளாஸ் லிமௌசைனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2 லட்சமும், ஜி.எல்.ஏ எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டான எஸ் 350டி லிமௌசைனின் விலை ரூ.7 லட்சமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விலைமிக்க மெர்சிடிஸ் காரான மேபக் எஸ் 580 -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் கூறியதாவது, ரூபாய்க்கு எதிரான யூரோவின் மதிப்பு சமீப மாதங்களில் நல்லப்படியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக யூரோவிற்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இது இந்தியாவில் எங்களது ஒட்டுமொத்த வணிகத்தையும் பாதித்துவிடும் என்றார். யூரோவிற்கு இணையான ரூபாயின் மதிப்பு குறைவது ஒரு பக்கம் பிரச்சனை என்றால், மறுப்பக்கம் அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகளும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற லக்சரி கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு கூட பிரச்சனையாக அமைகிறது. இவற்றின் காரணமாக கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டி இருப்பதால், அதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற நிதி தேர்வுகளை வழங்க மெர்சிடிஸ் முயற்சித்து வருகிறது.

ஏனெனில் மெர்சிடிஸ் கார்கள் மொத்தத்தில் 80% மாதத்தவணை முறையிலேயே வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் தான் அதிக எண்ணிக்கையில் லக்சரி கார்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் ஆகும். அதாவது இதற்கு அடுத்தே பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ போன்றவை உள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தம் 15,822 மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுவே 2021ஆம் காலண்டர் ஆண்டில் 11,242 கார்களை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், கடந்த 2022இல் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை 41% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கோடிகளில் விலைமிக்க கார்கள் மட்டுமின்றி, ரூ.30 -40 லட்சத்திலான கார்களும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் கார்களை அவ்வப்போது அப்டேட் செய்வதினாலேயே கடந்த ஆண்டில் 15,822 கார்களை மெர்சிடிஸால் விற்க முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








